சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சசிகலா உறவினரும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஒரு வார காலம் விடுமுறையை தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணையை தொடர்ந்தது.
ஏற்கனவே, ஜெ. மரணம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உறவினர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ வை வெளியிட்டார்.
வீடியோ வெளியானதற்கு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ விசாரணை ஆணையத்தில் கொடுக்கவே டிடிவியிடம் கொடுத்ததாகவும், அதை அவர் வெளியிட்டு விட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
வீடியோ வெளியானது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், வீடியோ குறித்து விளக்கம் அளிக்க அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி, ஜெ.வின் தோழி சசிகலா ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் 2 வார கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சிறையில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.