சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா, பகத்பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரபல நடிகை சிநேகா இரு காட்சிகளில் மட்டும் வருகிறார்.
“இவ்வளவு சிறிய கேரக்டரில் நடிக்க இவர் எப்டி ஒப்புக்கொண்டார்” என்று படம் ரிலீஸ் ஆன போதே பலரும் ஆச்சரியப்பட்டனர்.
தரமற்ற உணவு பொருளால் பிள்ளையை பறிகொடுத்த பெண்மணி, அது தரமற்ற உணவு என்று நிரூபிக்க தானே அந்த உணவை உட்கொண்டு தன்னை வருத்திக்கொள்வதுதான் சிநேகாவின் கேரக்டர்.
இது குறித்து சிநேகா, “படத்தில் முக்கிய கேரக்டர் என்றார்கள். 18 நாட்கள் சினேகாக நடித்துக் கொடுத்தேன். ஆனால் படத்தில் வந்தது சில காட்சிகள் தான். இந்த கதாபாத்திரத்துக்காக நான் ஏழு கிலோ எடையைக் குறைத்தேன். பிரசவத்துக்குப் பிறகு எடையைக் குறைப்பது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியும் சிரமப்பட்டு குறைத்தேன். ஆனால் ஐந்து நிமிடம் வரும் காட்சிக்காக ஏன் இத்தனை நாள் நடிக்கவைத்தார்கள் ” என்று படத்தின் இயக்குநர் மோகன்ராஜா மீது வருத்தப்பட்டார்.
தற்போது இதற்காக மோகன்ராஜா, சினேகாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார்.
அவர், “சினேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் படக்குழுவினர் அனைவருக்குமே இருக்கிறது. ஆனால் வேறு சிலரின் காட்சிகளையும் நீக்க வேண்டியிருந்தது. மற்றபடி யாருக்கும் ஏமாற்றம் அளிக்கும் நோக்கம் எனக்கில்லை.
கதைப்படி சினேகாவின் கதை நீண்ட நாள் நடப்பதாக இருந்தது இதற்காக நிறைய காஷ்ட்யூம் அணிந்து அவர் நடித்தார்.. முகத் தோற்றத்திலும் நிறைய மாறுதல் காட்ட வேண்டியிருந்தது. அவரது காட்சிகள் பெரும்பாலும் மாண்டேஜ் டைப்பிலானது. இதற்காகத்தான் அவர் அதிக நாள் நடிக்க வேண்டியதாயிற்று.
ஆனால் இன்றைக்கு அவரது கேரக்டர் தான் சிறப்பாக பேசப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அது.
ஆனாலும் நாங்கள் தவறு செய்திருப்பதாக சினேகா, நினைத்தால் மன்னிப்பு கோருகிறேன்” என்று மோகன் ராஜா தெரிவித்திருக்கிறார்.