பாராட்டுக்கள் இயக்குனர் சினீஷ்.
எடுத்தவுடனே பாராட்டுக்கள் சொன்னதும் செம சூப்பரான படம் என்றெல்லாம் நினைத்து விட வேண்டாம். அதே பழைய பேய்ப் படம்தான்.
சட்டென கதைக்கு வர்லாம்.
தனது முதல் சினிமாவை இயக்கும் முயற்சியிலிருக்கிறார் ஜெய். ஒரு சினிமா வெளிவருவதற்கும் முன்பே ” இந்த கதையில பிரச்சினை இருக்கு. எங்க சாதியைப் பற்றி தப்பு தப்பா சொல்லிருக்க்கீங்க.. எங்களுக்குப் படத்தைப் போட்டுக் காட்டுங்க..” என்று தகறாறு செய்யும் சாதிச் சங்க கோஷ்டிகளின் மிரட்டலினால் பயந்து போய், ஜெய்யின் மண் சார்ந்த கதையை நிராகரிக்கிறார் தயாரிப்பாளர். அதே சமயம் யாருக்கும் எந்த வித பிரச்சினையும் தராத பேய்க் கதையை படமாக எடுத்தால் தப்பிக்கலாம் என்று ஐடியாவும் தருகிறார் அந்த நல்ல தயாரிப்பாளர். ஆனால், பேய், சாமி குறித்த நம்பிக்கையற்ற ஜெய்க்கு அப்படி ஒரு பேய்க்கதையை படமாக எடுக்க மனமில்லை. எல்லா நல்ல படைப்பாளிக்கும் வருகின்ற அதே சோதனைதான் ஜெய்க்கும் வருகிறது. குடும்ப சூழல். அதனால் பிழைப்பிற்கு எதாவது ஒரு படம் எடுத்தே ஆக வேண்டும் என்பதால் தயாரிப்பாளரின் விருப்பப்படி ஒரு பேய்க்கதையை எழுதும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
ஊட்டியிலுள்ள ஒரு பேய் வீடு பற்றிய செய்தியை ஃபேஸ் புக் மூலம் அறியும் ஜெய், அங்கு போய் கதை எழுத நினைக்கிறார். உடன் அவருடைய மனைவி அஞ்சலியையும் ஜெய்யின் அண்ணன் மகனான பப்புவைவும் இரண்டு நண்பர்களையும் அழைத்துப் போகிறார். அந்த வீட்டைப் பற்றிய செய்திகளை எல்லாம் சேகரித்துக் கொண்டிருக்கும் போதே ஜெய்யின் வீட்டிலும் சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. அப்புறம் என்ன.. அந்த வீட்டில் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் பேயாவதற்கு முன்பு என்னாவாயிருந்தது என்கிற கதைகளை எல்லாம் நாமே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான்.
இடையிடையே கதவு திறப்பது, பொம்மை திரும்புவது பேயின் அலறல் உள்ளிட்ட சில பல மானே தேனே பொன்மானேக்களையெல்லாம் கூட நாமே போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
எவை எவற்றிற்கோ வந்து நம் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா பேய்கள் இதில் சாதி வெறி கொண்டவர்களைச் சாவடிக்க சமாதியை உடைத்து விட்டு வந்திருக்கின்றன.
அதானால்தான் இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.
ஆனால், அதற்கு மட்டுமேவா என்றால் இல்லை. படத்தின் முதல் பாதி மிகுந்த கவனமுடனும் நாகரீகத்துடனும் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆர். சரவணனின் அழகான படப்பதிவு, அழகான கோணங்கள், தொந்தரவு செய்யாத யுவனின் பின்னணி இசை, சுவாரசியமான கலகலப்பான வசனங்கள் ( உபயம்: யோகி பாபு ), ரூபனின் நேர்த்தியான படத் தொகுப்பு என்று ஓரளவு லாஜிக் மீறல்கள் எதுவும் இல்லாமல் சற்று நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது.
அத்துடன் மட்டுமின்றி இந்த பேய்க்கதை உருவானதற்கு காரணமாக்க சில ஆங்கிலப் படங்களின் பெயர்களைப் போடும் அந்த நேர்மைக்கும் பாராட்டுக்கள். அந்த ’இன்ஸ்பிரேஷன்’ படங்களின் வரிசையில் கன்னடப் படமான ’யு டர்ன்’ இருந்ததா என தெரியவில்லை. படம் முழுக்க வரும் பலூன் காட்சி ’யு டர்ன்‘ ல் அழகாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.
சாதிச் சங்க ஆட்களின் மடத்தனம், சினிமாவில் இருப்பவர்களின் குடும்பச் சூழல், எந்த மாதிரி கதையை எழுத வேண்டும் என்கிற நிர்பந்தம் எல்லவற்றையும் அளவுடன் சொல்லி நகர்கிறது முதல் பாதி.
ஜெய்யும் காட்சிகளுக்கேற்ப அளவுடன் நடித்திருக்கிறார். அவருக்குத் துணையாக அஞ்சலியும் நிறைவாகவே நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் சார்லி பாத்திரத்தின் மீது நம்பிக்கையின்றியே நடித்திருக்கிறார். அந்த பாத்திரம் இன்னும் உற்சாகமான ஆளாக இருந்திருக்கலாம்.
ஜெய்யின் அண்ணன் மகனாக வரும் சிறுவன் பப்பு, யோகிபாபுவைக் குறி வைத்து தாக்கும் ஒன் லைனர்கள் தியேட்டரை அதிரச் செய்கின்றன. இது யோகி பாபுவின் காலம். முதல் பாதி முழுக்கவே அவருடைய டைமிங் காமெடிகள்தான். பார்வையாளர்க:ளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். ஆனால், அதுவே அதிகமாகும் போது படத்தின் கதைப் போக்கைச் சிதைத்து விடுகிறது. பல இடங்களில் யோகி பாபு கொஞ்சம் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.
இரண்டாம் பாதி முழுக்கவே வேறு ஒரு இயக்குனர் இயக்கியதைப் போல நிறைய அமெச்சூரான காட்சிகள். அவைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
பேய்கள் என்றால் கண்களைச் சுற்றிக் கருவளையம் வரைந்து கொள்வது, கண்ணை வெள்ளையாக்கிக் கொள்வது, சிலரை அடித்து தூக்கி சுவற்றில் மாட்டி விடுவது, உர்..உர்ரென உறுமுவது, பேயை ஓட்ட ஒரு பாதிரியார் வருவது மாதிரியான காட்சிகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்டால்தானே. இவையெல்லாம் இந்த படத்தை இன்னொரு வழக்கமான பேய்ப்படமாக்கி விடுகின்றன.
அந்த மாதிரி க்ளீஷேக்களை எல்லாம் படத்திலேயும் சொல்லி கலாய்த்துக் கொள்கிறார்கள். பேய்க் கதை என்றால் ஒரு வீடு, கணவன் மனைவி, அல்லது காதலர்கள், ஒரு பொம்மை, ஒரு சிறுவன், சிறுமி, செத்துப் போக ரெண்டு பேர் என்று சொல்லும் போது யோகி பாபுவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே அமர்க்களப்படுத்துகிறார்.
சரி அந்த பேய்க்கு என்னதான் பிளாஷ் பேக்?
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் பலூன் விற்றுக் கொண்டிருக்கும் ஜெய்க்கும் ஜனனிக்கும் காதல். ஆனால், இருவரும் வேறு வேறு ஜாதி. ஜனனியின் ஜாதியைச் சேர்ந்த ஒரு கேடுகெட்ட அரசியல்வாதி தன்னுடைய ஆதாயத்திற்காக ஜனனியைக் கொலை செய்து விட்டு அதை தற்கொலை என்று நம்ப வைக்கிறார். அந்த தற்கொலைக்குக் காரணம் ஜெய்தான் என்று சொல்லி ஜெய்யையும் உடன் இருக்கும் ஒரு அனாதைச் சிறுமியையும் கொன்று விட்டு, தன்னுடைய சாதியினரின் ஆதரவைப் பெற்று எம்.எல்.ஏ சீட்டு வாங்குகிறார். அந்த அரசியல்வாதியால் கொல்லப்பட்டவர்கள்தான் பேயாக வந்து பழி வாங்குகிறார்கள்.
ஜெய்யைக் கொன்ற அதே நாளில்தான் இன்னொரு ஜெய் பிறக்கிறார் என்று ஒரு மறுஜென்மக் கதையையும் கொசுறாகச் சொல்கிறார்கள்.
ஜெய்யையும் ஜனனியையும் கொலை செய்யும் போது அந்த சாதிச் சங்க தலைவனும் அவனுடைய அடிப் பொடிகளும் பேசிக் கொள்வது சமகால சாதி ஆணவக் கொலைகளை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக ஜனனியின் அம்மா “ என் மகளை காதலித்தவனைக் கொல்லுங்க “ என்று கத்தும் போது முதலில் இவளுக்குத்தான் தூக்கு தண்டனை தரணும் என்பது போலிருக்கிறது.
ஜெய் மற்றும் அஞ்சலியின் பேய் அனுபவக் கதை முடிந்ததும் இயக்குனர் சொல்லும் சர்ப்ரைஸ் ” அட.. பரவால்லியே..” என்று நினைக்க வைக்கிறது.
இறுதியில் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமாவில் கலாச்சாரப் பிரச்சினையை விடவும் மிக முக்கியமாக சாதிப் பிரச்சினை பேசப்பட்டிருக்கிறது அதனால் நாம் இந்த படத்தைத் தான் முதலில் எதிர்க்க வேண்டும் என்று மண்ணாந்தையான ஒரு அரசியல் அடிப்பொடி கிளம்புவதும் அவனுக்கு என்ன நேர்கிறது என்பதும் பயங்கர ரகளையாக இருக்கிறது.
இந்த ஆண்டின் இறுதிகளில் கவனிக்க வைக்கும் படியான சில படங்கள் வந்துள்ளன. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அந்த வரிசையில் பலூனையும் பறக்க விட்டிருக்கலாம்.
சாதி வெறி பிடித்து அப்பாவிக் காதலர்களைக் கொலை செய்யும் சாதி வெறியர்களை நம்மால்தான் ஒன்றும் செய்யவில்லை. பேய்களாவது செய்யட்டுமே….
அதீதன் திருவாசகம்