மும்பை:

மும்பையின் லோயர் பேரல் பகுதியில் பிரபல கமலா மில்ஸ் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பத்திரிகை மற்றும் ஊடக அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்த வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த பலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து நடைபெற்ற கட்டிடத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் வந்து ஆய்வு செய்தார். தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 5 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராதாகிருஷ்ணன் விகே படீல் கூறுகையில், ‘‘ இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மும்பை மாநகராட்சியின் ஊழல் தான் இந்த விபத்துக்கு காரணம். இதற்கு மாநகராட்சி தான் பொறுப்பு. அதனால் மாநகராட்சி தலைமை அதிகாரி தலைமையில் விசாரணை நடப்பது சரியாக இருக்காது. சிவசேனா தலைமையில் செயல்படும் மும்பை மாநகராட்சி ஊழல் குறித்து விசாரிக்க அரசு மறுக்கிறது’’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் அஹிரும், உயிரிழப்புக்கு மாநகராட்சியின் ஊழல் தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபன் கூறுகையில், ‘‘விபத்து நடந்த மில்லில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 96 ஓட்டல்கள் எவ்வித தீ தடுப்பு அம்சங்களும் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. இதற்கு முன்பு தீ பாதுகாப்பு ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இந்த பகுதியின் மாநகராட்சி அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்’’ என்றார்.

மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் அசோக் சவான் கூறுகையில், ‘‘ அரசும், மாநகராட்சி நிர்வாகமும் ஓட்டல்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.