டில்லி
கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடியாது என அருண் ஜெட்லி கூறி உள்ளார்.
நாடெங்கும் உள்ள கூட்டுறவு வங்கிகள் தற்போதும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. மத்திய அரசிடம் இந்த வங்கிகளுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் எனவும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பப்பட்டது. இது குறித்து இன்று மக்கள் அவையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்தார்.
அருண் ஜெட்லி, “மற்ற வர்த்தக வங்கிகளைப் போலவே கூட்டுறவு வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இரண்டுக்கும் வித்யாசம் எதுவும் கிடையாது. அதனால் கூட்டுறவு வங்கிகளை தனிமைப் படுத்தி பார்க்கத் தேவை இல்லை. வர்த்தக வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து சலுகைகளும் கூட்டுறவு வங்கிகலுக்கும் அளிக்கப்படுகின்றன.
வர்த்தக வங்கிகளைப் போலவே கூட்டுறவு வங்கிகளும் உறுப்பினர் அல்லாத பொது மக்களுக்கும் தங்கள் சேவைகளை அளிக்கின்றன. எனவே இந்த வங்கிகளை கூட்டுறவு அமைப்புக்கள் என கருத முடியாது. கூட்டுறவு வங்கிகளும் லாபம் ஈட்டுவதால் அந்த லாபத்துக்கேற்ப வருமான வரி செலுத்தியே ஆக வேண்டும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.