சென்னை,

பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. அதில், கிரிமினல் சட்டப்படி முத்தலாக்குக்கு ‘மூன்று வருட சிறை தண்டனை’  விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் உள்ளது.

இந்த சட்ட திருத்தத்துக்கு காங்கிரஸ், அதிமுக உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

முத்தலாக் சட்ட திருத்ததுக்கு  திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

‘முத்தலாக்’ சட்டவிரோதம் என்று அறிவிக்கும் வகையில், ‘முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்ட மசோதா’வை அவசர அவசரமாக கொண்டுவந்து, மத்திய பா.ஜ.க. அரசு மக்களவையில் நிறைவேற்றி இருப்பதுடன், அதில் ‘மூன்று வருட சிறைத்தண்டனை’ என்ற கடுமையான பிரிவைச் சேர்த்து இருப்பதில் இருந்து, இஸ்லாமிய பெண்களின் நலனில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே நியாயமான அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

மாறாக, சட்டம் இயற்றுவதில் காட்டியிருக்கும் இந்த அவசரம் உள்நோக்கம் நிரம்பியதாக இருக்கிறது. குறிப்பாக, “முத்தலாக் முறையை ரத்து செய்ய நாடாளுமன்றம் சட்டம் கொண்டு வரலாம்”, என்றுதான் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே தவிர, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

“இஸ்லாமிய பெண்களின் தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்”, என்பதில், பெண் விடுதலைக்காகவும், பெண்ணுரிமைகளுக்காகவும் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடிவரும் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் ஆர்வமும், அக்கறையும் உண்டு.

அதேசமயத்தில், ஷரியத் சட்டத்திற்கு உள்ளும், ஒரு மதத்தின் சம்பிரதாயங்களுக்குள்ளும் அரசாங்கம் மூக்கை நுழைத்து, இப்படியொரு மசோதாவை அவசரமாக கொண்டு வரும் பின்னனியில்தான் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

“இஸ்லாமியப் பெண்களுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்”, என்பது மட்டுமே மத்திய பாஜக அரசின் நோக்கமாக இருந்திருந்தால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்ட கடந்த நான்கு மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகளுடனும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடமும் மத்திய சட்ட அமைச்சகம் பரந்து விரிந்த கலந்தாலோசனையை நடத்தி இருக்கலாம்.

அப்படியொரு ஆலோசனை நடத்துவதற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு மனமில்லையென்றால், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி, அதில் பங்கேற்றுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்கும் வழிமுறைகளையும் கடைப்பிடித்து இருக்கலாம்.

இப்படி எவ்வித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் விட்டதோடு மட்டுமல்லாமல், “நாங்கள் அது மாதிரி எந்த இஸ்லாமிய அமைப்புகளிடமும் கருத்துக் கேட்கவும் இல்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டியதும் இல்லை”, என்று மத்திய சட்ட அமைச்சர் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று இந்த மசோதா விவாதத்தின் போது கூறியிருப்பது வியப்பை மட்டுமல்ல, சட்டம் இயற்றுதலில், மக்களவையில் உள்ள பெரும்பான்மையை எதேச்சதிகாரமாக பயன்படுத்தவே மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு விரும்புகிறது என்பது புலனாகிறது.

இது ஆரோக்கியமான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எந்தவகையிலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்காது.

இஸ்லாமிய மக்களின் மதரீதியான சட்டத்திற்குள் புகுந்து ஒரு மசோதாவை கொண்டு வரும் முன்பு, ‘நாட்டு ஒற்றுமை, ஒருமைப்பாடு, இஸ்லாமிய பெண்களின் நலன்’ போன்றவற்றை மனதில் வைத்து, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு பா.ஜ.க. அரசு அனுப்பியிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, ‘மூன்று வருட சிறை தண்டனை’ அனுபவிக்க வேண்டிய ‘கிரிமினல்’ நடவடிக்கையாக இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருப்பது தேவையற்றது.

நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கும் அனுப்பாமல், கடுமையான சிறை தண்டனைக்கும் வழி வகுக்கும் இந்த மசோதா இஸ்லாமிய பெண்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைதானா என்பதை, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் “மகளிர் இட ஒதுக்கீடு” மசோதா நிறைவேற்றுவதை கிடப்பில் போட்டு வைத்திருக்கும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே, நாட்டின் பன்முகத்தன்மை, ஒருமைப்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்ட மசோதாவை இனியாவது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.