ரியாத்
உலக விரைவு செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றி உள்ளார்
சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக விரைவு செஸ் சாம்பியனுக்கான போட்டி நடை பெற்றது. இதில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற போட்டியில் மேக்னஸ் கார்ல்செனை விஸ்வநாதன் ஆனந்த் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் விளாதிமீர் ஃபெடொசீவை தோற்கடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இந்தப் போட்டியில் இவர் 29 நகர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் இவர் சுமார் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது வெற்றியை பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மற்றும் முன்னாள் செஸ் உலக நட்சத்திரமான கேரி காஸ்பரோவ் டிவிட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார். அதில், “அனைவருக்கும் நன்றி ! நான் எங்கோ மிதப்பது போல் உணர்கிறேன். எனது மனதில் நாங்கள் சாம்பியன்கள் என்னும் பாடல் கேட்கிறது. இந்த நேரம் என்றும் என்னால் மறக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.