சென்னை,
புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் பாஸ்போர்ட் கிடைக்காது என்று சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தாண்டு பிறப்பின்போது, சென்னையில் கடற்கரை சாலை போன்ற பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை செலுத்தி புத்தாண்டை வரவேற்பார்கள். இதன் காரணமாக பல விபத்துக்களும் ஏற்படுவதுண்டு
இந்நிலையில், அதி வேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் பிடிபட்டால், அவர்களுக்கு பாஸ்போர்ட் பெற போலீஸ் தடையில்லா சான்றிதழ் வழங்காது என்றும், எப்போதுமே கிடைக்காது வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் எச்சரித்து உள்ளார்.
மேலும், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, விபத்து ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து போலீசார் வழக்கத்தைவிட, கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
பந்தயம் கட்டி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது. ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி விபத்துகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணிவரை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.
சென்னை முழுவதும் 176 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்படும்.
அன்றைய தினம் விடிய, விடிய சிக்னல்கள் செயல்படும். 3,500 போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படும்.
மெரினா கடற்கரைக்கு வருவோர் விக்டோரியா விடுதி, வெலிங்டன் பள்ளி, ராணி மேரி கல்லூரி, மாநில கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினாலோ, குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்றாலோ அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.
வழக்கில் சிக்கியவர்களுக்கு பாஸ்போர்ட் பெற போலீஸ் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. இதனால் அவர்களுக்கு பாஸ்போர்ட் இனி எப்போதுமே கிடைக்காது.புத்தாண்டு கொண்டாட்டத்தில், வழக்கில் சிக்கியவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.
மற்ற நாட்களுக்கு இது பொருந்தாது. இளைஞர்கள் தான் பெரும்பாலும் வாகனங்களை வேகமாக ஓட்டிச்சென்று விபத்தை உண்டாக்குகிறார்கள். அதை தடுக்கவே இந்த நடவடிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.