சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளுக்கு முந்தைய நாள் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை  டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது இந்த வீடியோ வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான வெற்றிவேல், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விடுமுறை கால நீதிமன்றத்தில்  மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்த்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை 3ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவர் சிகிச்சை பெற்ற புகைப்படமோ, வீடியோவோ கிடையாது என்று அப்பல்லோ நிர்வாகமும், அரசும் அறிவித்து வந்தது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சர்ச்சை தொடர்ந்ததை தொடர்ந்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரைணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி,  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான எந்தவிதமான ஆதாரங்களாக இருந்தாலும் சமர்ப்பிக்குமாறு விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுக சாமி அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலை, தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இந்த வீடியோ வெளியானதால், தேர்தல் விதி மீறல் என அறிவிக்கப்பட்டது.  வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம், விசாரணை ஆணையம் ஆகியவற்றின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வீடியோ வெளியானது வெற்றிவேல் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் கேட்டு வெற்றிவேல் மனு தாக்கல் செய்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று விடுமுறை கால நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவும் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமுடியாது என்றும், ஜனவரி 3ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் வெற்றிவேலை கைது செய்ய தமிழக போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.