பனாஜி:

‘‘மகாதேயி நதி நீரை கர்நாடகா திருப்பிக் கொள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர் அனுமதிப்பதை மோடி தடுக்க வேண்டும்’’ என்று கோவா மாநில சிவசேனா கட்சி கடிதம் எழுதியுள்ளது.

கோவா சிவசேனா செய்தி தொடர்பாளர் ராக்கி பிரபுதேசாய் நாய்க் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளா. அதில், ‘‘கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் சாந்த கிளாஸ் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த பரிசு வழங்குவார். ஆனால், முதல்வர் மனோகர் பாரிக்கர் தீய சாந்த கிளாஸாக மாறி எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு கண்ணீரை வரவழைக்கும் வகையில் மகாதேயி நதி நீரை திருப்பிக் கொள்ள கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

முதல்வரின் இத்தகைய செயல்பாட்டை உங்களது கவனத்துக்கு கொண்டு வரவேண்டியது எங்களது கடமை. இந்த நதி எங்களுக்கு இயற்கை கொடுத்த பரிசு. மூதாதையர்கள் இதை வணங்கி பாதுகாத்து வந்துள்ளனர். இந்த நதியை எங்களது எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைக்க வேண்டியது எங்களது கடமை. குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக இதை பயன்படுத்த அனுமதிக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு சுமூக தீர்வு ஏற்படும் வகையில் கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு மனோகர் பாரிக்கர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதை தொடர்ந்தே சிவசேனா தற்போது பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.