நடிகர் தனுஷ் பாடல்கள் எழுதி வருகிறார். சொந்தக் குரலில் திரைப்படங்களில் பாடி வருகிறார். அத்துடன் அவர் ப பாண்டி என்னும் திரைப்படத்தை இயக்கி உள்ளார். ராஜ்கிரண் – ரேவதி நடிப்பில் உருவான இந்தப் படம் வியாபார ரீதியாக வெற்றி அடையவில்லை எனினும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுப் பெற்றது.
இந்நிலையில் தனுஷ் இன்னொரு படத்தை இயக்குவதாக செய்திகள் வந்துள்ளன. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் அந்தப் படத்தை கைவிடப்பட்டு தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தை இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தற்போது வட சென்னை, எனை நோக்கிப் பாயும் தோட்டா, மாரி 2 என பல்வேறு படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படங்களை வரும் ஜூன் மாதத்துக்குள் முடித்து விட்டு தனது இயக்குனர் பணியை துவங்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்க உள்ளதாகவும், தெலுங்கில் ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்கும் ஆலோசனையிலும் உள்ளதாகவும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.