சென்னை
இனி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்கள் மூலம் பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது வீட்டு உபயோகம், வணிக உபயோகம் என இருவகைகளில் வழங்கப் படுகிறது. இந்த சிலிண்டர்களை பொதுத்துறையான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சிலிண்டர்கள் காலி ஆகி, புதியது தேவைப்படும் போது தற்போது தொலைபேசி அல்லது இணைய தளம் மூலம் வீட்டு வாடிக்கையாளர்கள் பதிவு செய்கின்றனர்.
தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரை முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக பதிவு செய்யும் சேவையை துவக்கி உள்ளது. இந்த சேவை டில்லி உட்பட பல வட மாநில நகரங்களில் துவங்கி உள்ள நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ்நாட்டிலும் செயல் பட உள்ளது. இந்தியன் ஆயில் நிர்வாகி ஒருவர் இந்த சிலிண்டர்களை சமூக வலை தளம் மூலம் பதிவது எப்படி என்பதை இந்தியன் ஆயில் இணைய தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.