சனிப் பெயர்ச்சி 2017 : துலாம் ராசிக்கான பலன்கள்
துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை ஏழரைச் சனியாக படுத்தி வைத்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானத்தில் அமர்கிறார். இதனால் நீங்கள் இனி தொட்டது துலங்கி பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள்.
இழந்த செல்வாக்கு, பொருட்கள் ஆகியவை திரும்பக் கிடைக்கும். உடல் நல்ல ஆரோக்யம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, மகளுக்கு நல்ல கணவன் அமைதல், சொந்த வீடு வாங்குதல், வழக்குகளில் வெற்றி, கடன் தொல்லை தீருதல், பற்பல சாதனை புரிதல் ஆகியவைகளுக்கு மிகுந்த வாய்ப்புண்டு. வி ஐ பிகளின் அறிமுகம் கிட்டும். அதனால் மிகுந்த ஆதாயம் உண்டாகும்.
சனி பகவான் உங்கள் ஐந்தாம் வீட்டப் பார்ப்பதால் பூர்விக சொத்தை மாற்றி அமைத்தல் பிள்ளைகளுக்கு சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சமூகத்தில் அந்தஸ்து மேலும் உயரும். தந்தையாருடன் விவாதங்களை தவிர்க்கவும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கக் கூடும், சித்தர்களின் தொடர்பு கிடைக்க வாய்ப்பு உண்டு
வியாபாரிகளுக்கு கடையை நவீனப்படுத்துதல், பொறுப்பில்லா வேலையாட்களை நீக்குதல், தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றல் ஆகியவைகளால் லாபம் அதிகரிக்கும். சினிமா, அச்சகம், ஓட்டல், கிரானைட், டைல்ஸ் மர வர்த்தகர்கள் மேலும் ஆதாயம் அடைவார்கள். பங்குதாரர்களிடம் கவனம் தேவை
உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னை தரும் மேலதிகாரி மாறுவதால் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கு வழி ஏற்படும். புது வேலை அமையலாம். எதிர்ப்புக்கள் அடியோடு நீங்கும்.
மாணவர்கள் மற்றும் மாணவிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு விண் வதந்திகள் குறையும். அரசாங்க விருது கிடைக்க வாய்ப்பு உண்டு.
இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் நீங்கள் குப்பையில் இருந்தாலும் கோபுரத்துக்கு உயர்வீர்கள்.
மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். இந்த தினங்களில் இழுபறியாக இருந்த வேலைகள் உடனடியாக முடியும். பணவரவு திருப்தியாக இருக்கும். போட்டியில் வெற்றி, பிரபலங்களின் உதவி, பழைய நண்பர்கள் சந்திப்பு ஆகியவை நிகழும். யாராக இருந்தாலும் சாட்சி கையெழுத்து போடக் கூடாது.
பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில் எதிலும் வெற்றி, எதிர்பாராத பண வரவு, மகளின் திருமணம், சகோதர ஒற்றுமை நிகழும்.
உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்த கால கட்டத்தில் யாருக்கும் பணம் தர வேண்டாம். அரசாங்க வேலைகளிலும் நன்பர்கள் மற்றும் உறவினர்களிடத்திலும் எச்சரிக்கை தேவை.
வக்கிரச் சனி பலன்கள்
மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார். இந்த நேரத்தில் மனைவிக்கு பணி அமையும், நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும்.
பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார். இந்த நேரத்தில் வீண் விமர்சனங்களை தவிர்க்கவும்
உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் நிறைய நல்லது நடக்க வாய்ப்புண்டு.
பரிகாரம் : பிரதோஷ தினத்தன்று வெங்கனூரில் உள்ள ஸ்ரீ விருத்தகிரீஸ்வரரையும் ஸ்ரீ விருதாம்பிகையையும் வழிபட்டு வர வேண்டும்.