ஸ்ரீநகர்

ம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியுடன் தாம் இருப்பது போல ஒரு புகைப்படம் முகநூலில் பதிந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷிஷ் சரீன்.   இவர் தனது முகநூல் கணக்கில் தன்னை பாஜக வின் மாநில துணைத்தலைவர் எனவும் முன்னாள் பாஜக இளைஞரணியின் துணைத்தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.   அவருடைய முக நூல் கணக்கின் முகப்புப் படத்தில் தாம் மோடியுடன் இருக்கும் படத்தையும் கவர் புகைப்படமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தாம் உள்ள படத்தையும் பதிந்துள்ளார்.

ஆஷிஷ் சரீன் கடந்த செவ்வாய் அன்று முகநூலில் ஒரு புகைப்படத்தை பதிந்தார்.  அதில் தாம் ஒரு ஏகே 47 ரக துப்பாக்கியை கையில் பிடித்திருப்பது போல வெளியிட்டிருந்தார்.    இந்த புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வைரலாகியது.   இது குறித்து அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர்.    கடும் எதிர்ப்பு காரணமாக ஆஷிஷ் அந்த புகைப்படத்தை நீக்கி விட்டார்.

இது குறித்து ஆஷிஷ், “அந்தப் புகைப்படம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.   அது எனது நண்பரும் பாதுகாவல் அதியுமான ஒருவரின் துப்பாக்கி ஆகும்.   எனது சகோதரரால் இந்தப் படம் பதியப்பட்டுள்ளது.  இதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.   எந்த ஒரு சட்ட நடவடிக்கைக்கும் அடி பணிய தயாராக உள்ளேன்”  என தெரிவித்துள்ளார்.

ஆஷிஷ் பற்றி ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர் சர்மா, “ ஆஷிஷ் சரீன் கட்சியில் ஒரு பிரமுகர் மட்டுமே.    அவர் கட்சி நடவடிக்கைகள் எதிலும் கலந்துக் கொள்வது கிடையாது.   இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கட்சியில் இணைந்தார்.   சட்டம் தனது கடமையை செய்யும்” என அரிவித்துள்ளார்.