19.பிராமணர்கள் யூதர்களா?
அசோகமித்திரன் தமிழக பிராமணர்கள் யூதர்களாகிவிட்டனர் என்று குமுறியிருந்ததை முதலி லேயே பார்த்தோம். இது போல புலம்பும் பலரை நாம் சந்திக்க முடியும்.
இது சரியான ஒப்பீடு அல்ல என்பது ஒரு புறம், இன்னொரு புறம் இப்படி பிராமணர்கள் தங்களை யூதர்களாக உருவகித்துக்கொண்டு, எத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் நாங்கள் மீண்டெழு வோம், வெற்றிக்கொடி நாட்டுவோம் யூதர்களைப் போலவே என்று சொல்லிக்கொள்ளுகின்றனர்.
யூதர்களின் பிரச்சினை என்ன? அது இன்னமும் கூட மேலை நாடுகளில் தொடர்வானேன்? இன்றைய முன்னணி ஷேக்ஸ்பியர் ஆராய்ச்சியாளர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஒரு யூதர். அவர் பிரபல யேல் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஆசிரியர்க்கு உதவியாளராக விரும்புகிறார். அது வழக்கமாக எல்லோரும் செய்வதுதான். அதற்கு ஊதியம் உண்டு. அது ஓரளவு கல்விச் செலவை ஈடுகட்டும். அந்த வகையில் க்ரீன்ப்ளாட்டும் முறைப் படி மனுச் செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகும்போது, அவர் கொதிக்கிறார்.
“நீ யூதனா…இப்படித்தான் எங்கள் கிறித்தவர்களுக்குக் கிடைக்கவேண்டிய வேலையை எல்லாம் நீங்கள் தட்டிப் பறிக்கிறீர்கள். எல்லாவற்றையும் நீங்களே வைத்துக்கொள்கிறீர்கள் நாங்கள் வாடுகிறோம்,” என்று பொரிந்து தள்ளுகிறார்.
அவமானப்பட்டு உங்கள் வேலையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு நகர்கிறார் க்ரீன்ப்ளாட். அதன் பிறகு எத்தனை வித பொருளாதார நெருக்கடிகளோ, அவர் அது குறித்து எழுதவில்லை. பொதுவாக யூதர்கள் மேற்குலகெங்கும் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எழுதும்போது தன் அனுபவத்தையும் தொட்டுக்காட்டிச் செல்கிறார். அது நடந்தது 60களில்.
நாஜி ஜெர்மனி 1941-45 கட்டத்தில் 60 லட்சம் யூதர்களை கொன்றதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதை holocaust (ஹோலகாஸ்ட்), பெரும் அழித்தொழிப்பு என்பார்கள். அந்த ஹோலகாஸ்ட் தொடர்பில் தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்கள். ஜெர்மனி செய்த கொடுமையின் காரணமாய் இன்றும் குற்ற உணர்வில் புழுங்காத மேற்கத்திய படித்த வர்க்கத்தினர் எவருமில்லை என்று சொல்லும் அளவு இரண்டாம் உலகப்போர் குறித்து இடையறா ஆராய்ச்சி.
அமெரிக்க யூதர்களின் ஆதரவைக் கோராத வேட்பாளரே இருக்கமாட்டார். மிகப் பெரிய செல்வந்தர்கள் யூதர்கள்.
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை தொடர்ந்து ஒடுக்கிவந்தும் கூட, அதன் மீது அழுத்தம் கொடுத்து நியாயமான தீர்வு வேண்டும் எனச் சொல்வதற்கு எந்த அதிபரும் முன் வரமாட்டார்.
அந்த அளவு மேற்குலகில் யூதர்களுக்கு செல்வாக்கு என்பதெல்லாம் உண்மைதான். ஆனாலும் அதே நேரம் யூதர்களென்றால் முகம் சுளிப்பது, அவர்களைக் கிண்டல் செய்வது இன்னமும் தொடர்கிறது.
வேறொன்றுமில்லை அடிப்படையில் கிறித்தவத்திற்கும் யூதத்திற்கும் ஜென்மப் பகை. யூதத்தி லிருந்து உருவானதுதான் கிறித்தவம். ஆனால் பல்வேறு யூத பழக்கவழக்கங்களுக்கெதிராக புரட்சி செய்கிறார் ஏசு கிறிஸ்து. இறுதியில் யூதர்களால்தான் அவர் கொல்லப்படுகிறார்.
அவ்வகையில் கொலை வெறியே இரு மதங்களுக்குமிடையில் நீண்ட காலம். மார்ட்டின் லூதர் கடுமையாக யூதர்களை திட்டித் தீர்க்கிறார். இவர்கள் சாத்தானின் பிள்ளைகள், இவர்களால்தான் நமக்கெல்லா பிரச்சினையும் என்கிறார்.
கிறித்தவம் வெற்றிக்கொடி நாட்டி ஐரோப்பாவில் விரிந்து பரந்து நிலை நிறுத்திக்கொண்ட பிறகு யூதர்கள் மீது துவேஷம் அதிகரித்தது. அவர்கள் உடை, உணவு, பொதுவாக பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் அனைத்தும் கேலி செய்யப்பட்டன. எங்கள் ஏசுவைக் கொன்று ஏனடா எங்கள் மத்தியில் வாழவேண்டும் என்பதுதான் ஒரு கட்டத்தில் தாரகமந்திரமாகவே இருந்தது.
ஒரு யூத வரலாற்றாசிரியர் கூறுவது போல், ”முதலில் எங்கள் மத்தியில் யூதர்களாக வாழாதே என்றார்கள், பின்னர் எங்கள் மத்தியில் வாழாதே என்று சொல்லி தனி ‘கெட்டோ’க் களை உருவாக்கினர், நாஜிகளோ நீ வாழவே வாழாதே என்று சொல்லி காஸ் சேம்பர்களுக்கு அனுப்பினர்.”
எங்கள் மத்தியில் பார்ப்பனராக வாழாதே என்று சில பெரியாரிஸ்டுகளும், நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே திரும்பிவிடு, இது தமிழர்களின்/திராவிடர்களின் மண் என்று சில அதி தீவிர பெரி யாரிஸ்டுகளும் சொல்வதும் இந்த ரகம்தான்.
ஆனால் இவையெல்லாம் ஒரு rhetorical level, மேடை பேச்சு, எழுத்து மட்டத்திலேயே நிற்கிறது. செயலில் எதுவும் நடந்துவிடவில்லை. அவ்வப்போது சொல்வார்கள் நாங்கள் நினைத்தால் நீங்கள் ஒருவரும் தப்ப முடியாது. அது உண்மைதான் 90 சத மக்கள் ஒன்று திரண்டால் 2 சதத்தினர் கதி என்ன? ஆனால் திரளவில்லை, பெரிய அளவிலான வன்முறை வெடிக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.
ஒரு சுவையான விஷயம் என்னவெனில், பெரியாரே பார்ப்ப னர்களை யூதர்களுடன் ஒப்பிட்டிருக்கிறார். ஜெர்மானியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்குச் சொல்லும் காரணங்கள் இங்கும் பொருந்தும், ஆரியர்களை விரட்டியடிக்கப்படவேண்டியவர்களே என்கிறார் அவர்.
இறுதிவரை அவரால் பார்ப்பனர்கள் மீதிருந்த துவேஷத்திலிருந்து மீள முடியவே இல்லை. தன்னுடைய இறுதி உரையிலும் அவர் பாப்பானைப் பார்த்தால் ‘வாப்பா தேவடியாள் மகனே எப்போ வந்தே’ என்று கேட்க வேண்டுமென்கிறார்.
அவர்களது கொட்டம் அடக்கப்பட்டுவிட்டது. ஆதிக்கம் தகர்க்கப்பட்டுவிட்டது. பார்ப்பனரல்லாதார் பெயரில் ஆட்சிக்கு வந்த திமுக, குறிப்பாக கருணாநிதிதான் அன்றைய நிலையில் மக்களின் மிகப் பெரிய விரோதி, ஆனால் அவர் தொடர்ந்து பார்ப்பனர்களையும் இந்துக் கடவுளர்களையும் வசை பாடுவதிலேயே குறியாயிருந்தார்.
அத்தகைய வன்மமே இன்று நாம் வீரமணியிடமும் கு ராமகிருட்டினனிடமும் மதிமாறனிடமும் மற்ற பலரிடமும் காண்கிறோம்.
பிராமணீயத்தைத் தூக்கிப் பிடிக்கும் பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் வளர்ந்தாலும் இந்த வன்மம் குறையும் வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொந்த நலனுக்காகவோ அல்லது உண்மையிலேயே இன்னமும் பிராமணர்களே தமிழ்ச் சமூகத்தின் விரோதிகள் என்று நம்புவதாலோ தொடர்ந்து பிராமணர்கள் மீது வெறுப்பை வாரி வீசுவார்கள். அதிலிருந்து, அத்தகைய சொல் வன்முறையிலிருந்து, தப்பிக்கவே இயலாது. ஆனால் செயலிலும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.
(அடுத்த வாரம் இத்தொடர் நிறைவு பெறுகிறது.)