கான்பெரா, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய நாட்டு பாராளுமன்ற ஆண் உறுப்பினர் தனது காதலரிடம் திருமண வேண்டுகோளை பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பலர் கலந்துக் கொண்டு பேசினர். அதில் டிம் வில்சன் என்னும் ஆண் உறுப்பினரும் ஒருவர்.
டிம் வில்சன் தனது விவாதத்தின் போது தான் ஓரினச் சேர்க்கையில் விருப்பம் உள்ளதால் அடைந்த அவமானங்களையும், தனது வாழ்க்கை முறையையும் பற்றிக் குறிப்பிட்டார். அத்துடன் தனது காதலர் ரியான் பொலுஜர் என்பவர் பார்வையாளராக அமர்ந்திருப்பதையும் கூறினார்.
பிறகு பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த பொலுஜரிடம், “எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டுமே பாக்கி இருக்கிறது. ரியான் என்னை நீ திருமணம் செய்துக் கொள்வாயா?” எனக் கேள்வி எழுப்பினார். பொலுஜரும் அதை பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார். பார்வையாளர்களும் மற்றவர்களும் கைதட்டல் எழுப்ப இந்த சம்மதத்தை பாராளுமன்ற நடவடிக்கை பதிவில் சபாநாயகர் பதிந்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் அதுவும் பாராளுமன்றக் கூட்டத்திலேயே காதலை வெளிப்படுத்தி சம்மதம் கேட்ட முதல் பாராளுமன்ற உறுப்பினர் டிம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.