டில்லி:

1998ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி காங்கிரஸ் அகில இந்திய தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 19 ஆண்டுகளாக அவர் இந்தப் பொறுப்பில் உள்ளார். கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் விதமாகவும் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

2013ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர் துணைத் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க சோனியா காந்தி சம்மதம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் 16-ம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் 1ம் தேதி தொடங்கியது. இது வரை வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்தி நாளை (4-ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அவரது வேட்பு மனுவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் முன்மொழிவார்கள் என்று தெரிகிறது.

5ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை 3.30 மணியளவில் வெளியிடப்படும். ராகுல் காந்தியை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாத நிலையில் அன்றைய தினமே அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

யாரேனும் எதிர்த்து போட்டியிட்டால் வேட்பு மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாளாகும். 16-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.