சென்னை
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பது குறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளது.
திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பது குறித்து விளக்கமாக அக்கட்சியின் உய்ரிநிலைக்குழு தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
அந்த தீர்மானத்தின் விவரம் வருமாறு :
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உயர்நிலைக் குழுத் தீர்மானம்!
இன்று (3.12.2017), தாயகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டுக் காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழல், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும், நம்பிக்கை இன்மையையும் உருவாக்கி இருக்கின்றது.
அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்ட அண்ணா தி.மு.க. ஆட்சி, மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய பாரதிய ஜனதா அரசிடம் பலி கொடுத்துவிட்டு, டெல்லியின் தாள் பணிந்து கிடப்பதால், தமிழக மக்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகி உள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக மாநில சுயாட்சி முழக்கத்தைத் தமிழ் மண்ணில் இருந்துதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுப்பினார்கள். பேரறிஞர் அண்ணாவின் அடியொற்றி, டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, இந்தியாவின் பல்வேறு மாநிலத் தலைநகரங்களில் மாநில சுயாட்சி முழக்கம் எழக் காரணம் ஆனார்கள்.
ஆனால் இன்று, மாநில சுயாட்சிக் கோரிக்கையை நிராகரித்து, கூட்டு ஆட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தோடு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது.
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு எனத் தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. கூடங்குளம், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன், கச்சத்தீவு, தமிழக மீனவர் நலன், நீட் தேர்வு, நவோதயா பள்ளிகள், இந்தித் திணிப்பு என அனைத்து முக்கியமான பிரச்சினைகளிலும், மத்திய பாரதிய ஜனதா அரசைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லாத அண்ணா தி.மு.க. ஆட்சி, கை கட்டி வாய்பொத்தி அடிமைச் சேவகம் புரிகின்றது.
தமிழகத்தின் மொழி, இன, பண்பாட்டு மரபு உரிமைகள் கேள்விக்குறி ஆகிவிட்டன. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரான இந்துத்துவ மதவெறி சக்திகளின் ஆக்டோபஸ் கரங்கள், தமிழகத்தை வளைக்கும் பேராபத்து சூழ்ந்து வருகின்றது. அ.தி.மு.க. அரசை இயக்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மறைமுகமாகக் கூட அல்ல, ஆளுநர் மூலம் நேரடியாகவே தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கின்றது. பா.ஜ.க. நடத்தி வரும் அரசியல் திருவிளையாடல்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் துணைபோய்க் கொண்டு இருக்கின்றார்கள்.
அரசியல் சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதித்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சி தாக்குதல் தொடுத்து வருவதை, ஜனநாயகத்தின் பால் அக்கறை கொண்ட சக்திகள் வேடிக்கை பார்க்க முடியாது.
இத்தகைய சூழலில், டிசம்பர் 21 ஆம் நாள் நடைபெற இருக்கின்ற இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், முன் எப்பொழுதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட அ.தி.மு.க. அரசுக்கு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மூலம் பாடம் கற்பிக்க வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, வருங்காலத் தமிழகத்தின் நலனையும் கருத்தில்கொண்டு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மகத்தான தியாகத்தாலும், அளப்பரிய சாதனைகளாலும் ஒரு நூற்றாண்டுக் காலமாகக் கட்டி எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டையாம் திராவிட இயக்கத்தைத் தகர்ப்பதற்கும் சிதைப்பதற்கும் கங்கணம் கட்டிக் கொண்டு, இந்துத்துவ சக்திகளும், திராவிட இயக்கத்தின் பரம எதிரிகளும், நாலாத் திசைகளில் இருந்தும் பலமுனைத் தாக்குதல் நடத்தும் சூழலில், திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவேண்டிய வரலாற்றுக் கடமை மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு இருக்கின்றது.
எனவே, ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவது என்றும், வெற்றிக்காகப் பணியாற்றுவது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது.
தலைமைக் கழகம் மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை – 8 03.12.2017