நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடந்த வருடம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்ட புதிய பாலம் தற்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.
இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓகி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாயின. கன்னியாகுமரி மாவட்டம் சின்னாபின்னமாக சீர்குலைந்துபோனது. தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக நெல்லை மாவட்டம் கொடி முடியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நிரம்பியது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்ததால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அறிவுறுத்தினர்.
அணை திறந்ததன் காரணமாக நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக களக்காடு அருகே உள்ள தளவாய்புரம், ஆவரந்தலை கிராமங்களை இணைக்கும் உயர்மட்ட பாலம் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இந்த சோகம் என்னவென்றால், இந்த பாலம் கட்டப்பட்டு ஒரு வருடமே ஆகிறது.
கடந்த ஆண்டுதான் திறக்கப்பட்ட இந்த பாலம் கட்ட ரூ.40 லட்சம் மதிப்பிடப்பட்டது. ஆனால், தற்போது உடைந்துள்ள பாலத்தை பார்க்கும்போது, இந்த பாலம் தரமற்ற கான்கிரிட் கொண்டு கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
பாலம் உடைப்பு காரணமா திருக்குறுங்குடியில் இருந்து ஆவரந்தலை, கட்டளை, வன்னியன்குடியிருப்பு உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இப்பகுதி மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல 6 கிலோமீட்டர் சுற்றியே போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. களக்காடு சுற்றுப்பகுதியில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.