நன்னியோடு, கேரளா
அச்சமின்றி ஆண்களைப் போல் கேரளப் பெண் ஒருவர் பாம்புகளை பிடித்து வருகிறார்.
கேரளா மாநிலத்தில் பாலாடு பகுதியில் உள்ள நன்னியோடு கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ராஜி (வயது 33). இவர் சமூக சேவையாக பாம்புகளைப் பிடித்து வருகிறார். கடந்த 9 மாதங்களில் மட்டும் இவர் திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளில் 119 பாம்புகளைப் பிடித்து வனப் பகுதியில் விட்டு இருக்கிறார். இரவு நேரமானால் கணவருடன் சென்று பாம்புகளைப் பிடிக்கிறார்.
ராஜி இது குறித்து, “நான் இதை ஒரு சமூக சேவையாக செய்து வருகிறேன். யாரிடமும் பணம் கேட்பதோ பேரம் பேசுவதோ இல்லை. சிலர் எனக்கு நன்கொடையாக வற்புறுத்தி பணம் அளிக்கும்போது பெற்றுக் கொள்கிறேன். ஏழைகள் முதியவர்கள் என்றால் வற்புறுத்தினாலும் பணம் வாங்க மாட்டேன்” எனக் கூறி உள்ளார். இதுவரை எந்தப் பாம்பும் இவரைக் கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். யார் வீட்டில் பாம்பு புகுந்தாலும் உடனடியாக மக்கள் இவரை அழைக்கின்றனர். இவரும் சளைக்காமல் தைரியமாக அந்தப் பாம்புகளைப் பிடித்து விடுகிறார்.