ஜெயலலிதாவுக்கே ‘எல்லாமுமாய்’ திகழ்ந்தவர்கள் சசிகலா குடும்பத்தினர்.. அவர்கள் வாயாலேயே இதை பல முறை பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள்.. தற்போதும் சொல்லி வருகிறது அந்த குடும்பம்..

இன்னொரு பக்கம் ஜெயலலிதாவையே கட்டுப்பாட்டில் வைத்திருத்து ஏராளமாய் சாதித்தவர்கள் சசிகலா குடும்பத்தினர் என அதிமுகவுக்கு எதிரானவர்கள் சொல்லிவந்தார்கள்.. ஜெயலலிதா காலமான சில மாதங்கள் கழித்து அதிமுகவின் முக்கிய தலைவர்களே இப்படி சொல்லிவருகிறார்கள்..

மொத்தத்தில் சசிகலா குடும்பத்திற்கு எதிராகத்தான் நிறைய தரப்புகள் உள்ளன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரை வெளியுலகிற்கு காட்டாமல் ஏதோதோ கதைகள் சொன்ன ஆரம்பித்த நாள் முதலே மக்களின் கோபத்திற்கு ஆளானது சசிகலாதான்..

ஏனெனில் 2011 ஆம் ஆண்டு கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போயஸ் தோட்டத்தைவிட்டு உறவினர்கள் அனைவரோடும் வெளியேற்றப்பட்டவர் சசிகலா.. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்பிவர அனுமதிக்கப்பட்ட ஒரே ஆள் சசிகலா மட்டுமே.. ஜெயலலிதா காலமாகும் வரை மற்றவர்கள் மீதான வெளியேற்றம் அமலிலேயே இருந்ததால் அவர்கள் யாரும் பகிரங்மாக அப்பல்லோ மருத்துவமனை பக்கம் எட்டிப்பார்க்க முடியவில்லை..

சென்னை ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்ட பிறகே அங்கே சசிகலாவின் உறவினர்கள் அடுத்தடுத்து முளைக்கத் தொடங்கினர்.. எல்லாமே இனி நாங்கதான் என்ற தொணி அவர்கள் அனைவரிடமுமே வெளிப்பட்டது..

இந்த ‘பொசிஷன் எடுக்கும் வேகமும் விதமும்’ தான் அவர்களுக்கே எதிர் வினையாகப்போய்விட்டது..ஒரு முறை அல்ல..ஒவ்வொரு முறையும்..

 

முதல் குறி, முதலமைச்சர் சீட்டு.. அதற்கான முன்னோட்டமாய் நெற்றித்திலகம், கொண்டை, கால் செருப்பு என ஒன்றுவிடாமல் ஜெயலலிதா மாதிரியே நடை உடையை மாற்றிக்கொண்டு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றியது. இங்கே கொஞ்சம் நிதானித்து ஓபிஎஸ்சை நிம்மதியாக ஆளவிட்டு திரைமறைவில் ஆட்டிப்படைத்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது.. ஆனால் அதிரடியாய் ராஜினாமா செய்யச்சொன்னதில் பிடித்தது வில்லங்கம்..

மக்கள் செல்வாக்கால் முதலமைச்சர் பதவியை தற்காலிக ஏற்பாட்டுக்காக ஜெயலலிதா விட்டுத்தந்து பின்னர் திருப்பி கேட்டதற்கும்.. மக்கள் மத்தியில் அங்கீகாரமே வாங்காத சசிகலா, சிஎம் பதவியை கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் ஓபிஎஸ்சை யோசிக்கவைத்துவிட்டது… விளைவு?

தியான அரசியலில் ஆரம்பித்து, பதவியேற்க அழைப்பு விடுக்க கவர்னர் விளையாடிதில் நன்றாக வளர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடைசியில் பெங்களுரூ சிறையில் கொண்டுபோய் சசிகலாவை அடைத்துவிட்டது..

பதவியேற்பு விழாகூட தயாராகி, பரந்துவிரிந்த ஒரு மாநிலத்திற்கே முதலமைச்சராக ஆகப்போகிறவர் என்று பேசப்பட்ட சசிகலா, தீர்ப்பு என்ற ஒற்றை திருப்பத்தால் சில நாட்களிலேயே தண்டனை கைதியாக மாறியது இந்திய அரசியல் வரலாற்றில் பரபரப்பு திருப்பம்.. சமூக அந்தஸ்த்தில், முதலமைச்சர் பதவி எங்கே..! சிறைத்தண்டனை கைதி எங்கே….!

சசிகலா உள்ளே போன பிறகாவது கொஞ்சம் அடக்கி வாசித்து பொறுமை காத்தார்களா? எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கி அவரையாவது ஆண்டுகொண்டுபோங்கள் என்று விலகியிருக்கலாம்..

ஆனால் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் என்ற கிரீடத்தை சூட்டிக்கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிடிவி தினகரன் குதித்தார்.. பொதுச்செயலாளர் சசிகலாவின் படத்தைப்போட்டுக்கூட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட துணிச்சலில்லை..

என்ன ஆயிற்று? தினகரன் எம்எல்ஏவாக ஆகி பின்னர் முதலமைச்சராகி கோலேச்சலாம் என்ற திட்டத்தை தகர்க்க தேர்தலே ரத்தாகிப்போனது.. இங்கேயும் எதிர்வினையே..

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் ஆரம்பித்த ஓபிஎஸ்க்கு, டெல்லி என்கிற வலுவான பின்பலம் உள்ளதென்று தெரிந்தும், பின்விளைவுகள் தெரியாமல் புன்னகைத்தபடியே வாள் சுற்ற ஆரம்பித்தார் தினகரன்..

டெல்லி தரப்போ தூர இருந்துகொண்டே நக்கலாக துப்பாக்கி எடுத்து அடுத்தடுத்து சுட்டுத்தள்ள ஆரம்பித்தது.. கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகிய மூன்றும் காணாமல் போச்சு..கூடவே தினகரனின் து.பொ.செ பதவியும் போச்சு.. இதைவிட பரிதாபம், தினகரன் வாள்வீச்சில் சிறையில் இருக்கும் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் சேர்ந்துபோனதுதான்..

அதன்பிறகும் தினகரனின் வாள்வீச்சு தொடர்ந்ததில் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்து பல வாரங்கள் கொடுக்கப்பட்ட திகார் சிறைவாசம்.. கனவில் அடையாளம் தெரியாத ஒருத்தியை பலாத்காரம் செய்ததாய் ஒருவனை கைது செய்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட வித்தியாசமான வழக்கு அது.. தேர்தல் ஆணையத்தில் யார் தினகரனிடம் லஞ்சம் கேட்டார்கள் என்பதை கடைசிவரை காட்டாததே இந்த எபிசோடில் மிகவும் சிறப்பான அம்சம்..

வாழ்ந்த வீடே என்றாலும் கூரை சரிந்து மேலே விழுகிறது என்றால் அங்கிருந்து ஓடிப்போய் சற்று தள்ளித்தான் வேடிக்கை பார்க்கவேண்டும். இதுகூடத்தெரியாமல் எட்டிப்போகவே மாட்டேன் என வீராப்போடு சரிந்து விழும் கூரையை வாள்வீச்சால் தட்டிவிட்டுவிடலாம் என்பதே தினகரனின் போக்காக மாறிப்போனது..

போகிற இடமெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பைக் காட்டிலும் தனக்கே அதிமுக தொண்டர்கள் ஆதரவு என மேலூரில் ஆரம்பித்து வெவ்வேறு இடங்களில் செல்வாக்கு என தொடர்ந்து காட்டிவந்தார் தினகரன்..

அப்படியா சங்கதி, பணம் தாராளாமாக செலவு செய்யமுடியும் என்பதால்தானே இப்படியொரு ஆட்டம் என எதிர்தரப்பில் மீண்டும் துப்பாக்கி சூடு..

இந்திய வரலாற்றில் முதல்முறையாக என 187 இடங்களில் 1800 அதிகாரிகள் வருமான வரித்துறையிலிருந்து படையெடுத்தார்கள்.. பல நாட்கள் பிரித்து மேய்ந்து, அள்ளிக்கொண்டு போனார்கள்.. ஏராளமான வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.. முக்கியமாக தினமும் கோடிகளில் வருவாயை கொட்டித்தந்த அட்சய பாத்திரம் என்று பேசப்பட்ட மிடாஸ் சரக்கு கம்பெனிக்கு ரெய்டு சரக்கு அதிகமாக ஊற்றப்பட்டு படுக்கவைக்கப்பட்டது.

வழக்கம்போல் எல்லாவற்றையும் புன்னகைத்தபடியே எதிர்கொண்டார் டிடிவி தினகரன்.. இதனாலெல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது..எத்தனையோ சிறைகளை பார்த்தவர்கள் என்றெல்லாம் சேனல் மைக்குகள் முன்பு ரிபீட் செய்தபடியே இருந்தார்… அவரைப்போலவே மிகமுக்கிய புள்ளியான திவாரகனும் புன்னகைத்தார். ஆனால் வெகு சுலபத்திலேயே அவர் தளர்ந்துபோனார்.

ஆதரவுக்கரம் நீட்டி காப்பாற்றிய சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா பாதுகாக்காமல் விட்டுவிட்டு போய் விட்டார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் குமுறித்தீர்த்தார்.. ஒரு விஷயத்தை இங்கே கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை பிடிபடும்.. தினகரனைப்போல அரசியல் அழுத்தத்தோடு சீறும் திவாகரன், ரெய்டுக்குப்பிறகு மொத்தமாய் சைலன்ட் மோடில் போய்விட்டார். வேட்டையில் அதிகம் கிடைத்ததே அங்குதான் என்று புன்னகைக்கிறார்கள் வருமான வரி வாலாக்கள். அள்ளிக்கொண்டு போன ஆவணங்கள் அப்படி அவரை நிலைகுலையச் செய்திருக்கலாம்..

‘’தினகரன் வாளை சுற்றாமல் கையையும் வாயையும் மூடிக்கொண்டு சும்மா இருந்திருந்தால் இந்த அளவுக்கு நெருக்கடியும் எதிர் கால தொல்லைகளுக்கான நிரந்தர விதைகளுக்கும் விதைக்கப்பட்டிருக்காது’’ என்ற சசிகலா உறவுகளுக்குள்ளே புகைச்சல் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

டெல்லி பாதுஷாவின் ஆதரவில் இருப்பவர்களுக்கு எதிராக தினகரன் வாளை சுழற்ற சுழற்ற ஒரு இடத்திலும் சசிகலாவின் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியவில்லை.

சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர் ரிசர்வ் பேங்க் பாஸ்கரன் என அடுத்தடுத்து மேல் முறையீட்டில் சிறை தண்டனைகள் உறுதியாகி வருவதையும் இங்கே தவறாமல் நினைத்துப்பார்க்கவேண்டும்

ஆட்சியும் போய், கட்சியும் போய், கூட இருந்த எம்பிக்களும் தற்போது போய்விட்டனர் தினகரனைவிட்டு.. ஆனால் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் போனார்கள் என்று சொல்கிறார் தினகரன்.. உள்ளே அழுதுகொண்டே வெளியே சிரிப்பதைத்தவிர வேறென்னவாக இருக்கமுடியும்.. தனது சிலிப்பர் செல்கள் இருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.. இப்போது அவர் மட்டுமே இருக்கிறார் போலவே தோன்றுகிறது.

சிலிப்பர் செல்கள் என்று சொல்லி எப்படி மெர்சல் வித்தையை காட்டிக்கொண்டிருந்தாரோ, அதேபோலத்தான் சசிகலா குடும்பத்திற்கு அரசியல் ரீதியாக தான்தான் தலைமை என்று தன்னிச்சையாக சொல்லிக்கொள்கிறாரோ என்ற சந்தேகமும் தோன்றுகிறது..

கடந்த சில மாதங்களாக தினகரனின் அரசியல் செயல்பாட்டால் சசிகலா உறவினர்கள், பெற்றதை விட இழந்த நிம்மதிகள்தான் அதிகம்.. அதற்கு சாட்சியம் கூறுவதுபோலவே உள்ளது, அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக முன்புபோல பலமாய் திருவாய் மலராதது..

அடுத்தபடியாக இரட்டை சிலை சின்னம் விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து வாளை சுழற்ற ஆரம்பித்திருக்கிறார் டிடிவி தினகரன்.. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் மீசைய முறுக்குகிறார்.. இதற்கெல்லாம் என்ன மாதிரியான ரிட்டர்ன்ஸ் கிடைக்கப்போகிறதோ?

இன்றைய தேதிக்கு, தினகரன் என்பவர், சசிகலா குடும்பத்திற்கு ‘’வேண்டப்பட்ட விரோதி’’ மாதிரிதான் தெரிகிறார்..