சென்னை,

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால், முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மோடி தமிழகத்திற்கு அநீதி இளைப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது,  நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க  அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

இந்நிலையில் ஆய்வு மையம் குறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இத்திட்டத்தை மத்திய அரசின் கேபினட் செயலாளர் கண்காணித்து ஒருங்கிணைப்பார் என்றும் இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பிரதமரின் இந்தச் செயல் மாநில உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் உள்ளது.

எந்த ஒரு திட்டத்தையும் தங்களுடைய மாநிலத்தில் அனுமதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இருப்பதை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி இருக்கிறது. அப்படி இருக்கையில் பிரதமரின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானது.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் தாக்கல் செய்த வழக்கில், 26.03.2015 ஆம் தேதி தீர்ப்புக் கூறிய நீதியரசர்கள் தமிழ்வாணன் மற்றும் ரவி ஆகியோர், நியூட்ரினோ திட்டத்தை, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வாங்காமல் தொடரக்கூடாது என இடைக்கால தடை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக கிளை, அந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது.

இந்தப் பின்னணியில் பிரதமர் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிடுவது முழுவதும் சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும். இந்தியாவின் தலைமை அமைச்சரே தமிழக அரசை நிர்பந்தித்து திட்டத்தைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கும் கேடாகும்.

நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யுனெஸ்கோ நிறுவனத்தால் “பல்லுயிரியம் முக்கியத்துவம் வாய்ந்துள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது, மாதவ் காட்கில் குழுவும், கஸ்தூரிரங்கன் குழுவும் “சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களாக” அறிவித்துள்ளன. நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள பகுதி, வைகை, வைப்பாறு, முல்லைப் பெரியாறு என முக்கியமான 12 நீர் தேக்கங்களுக்கு அருகில் உள்ளது.

இந்தத் திட்டத்திற்காக லட்சக்கணக்கான டன் பாறைகள் உடைபடும் போது, அதன் அதிர் வலைகள் நிச்சயமாக நீர்தேக்கங்களைப் பாதிக்கும் என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அதுவும் குறிப் பாக தமிழகம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி மீட்டெடுத்த முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமைவாய்ந்த அணையாகும். பல லட்சக்கணக்கான கிலோ வெடி மருந்துகளைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படும் போது முல்லைப் பெரியாறு அணை பலமிழக்கும் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.

கேரளத்தின் இடுக்கி அணைக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்தை தேனி மாவட்ட அம்பரப்பர் மலையில் செயல்படுத்த மத்திய அரசு முயல்வதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

தென் தமிழக மக்கள், குடிநீருக்கும் விவசாயத்திற்கும் இந்த நீர் தேக்கங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். நியூட்ரினோ திட்டம் மக்களின் வாழ்வாதாரங்களை நிச்சயமாக பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வந்தனர். பிரதமரின் இந்த அறிவிப்பு அவர்களிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூட்ரினோ திட்டம் இயற்கையாக வரக்கூடிய நியூட்ரினோ கற்றைகளை மட்டும் அல்லாமல் செயற்கையாக அமெரிக்காவின் பெர்மி லேபில் உற்பத்தி செய்யப்பட்டு, அம்பரப்பர் மலையில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தை நோக்கி அனுப்பப்படும் என திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. செயற்கை வகை நியூட்ரினோக்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என இயற்பியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மாறிவரும் காலநிலை மாற்றமும், புவி வெப்பமயமாதலும், உலகம் முழுவதும் சூழல் குறித்த கவலைகளை உருவாக்கி வரும் நேரத்தில், மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் மிக அருகில், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நியூட்ரினோ திட்டம் அமைய இருப்பது நிச்சயம் சூழல் சீர்கேட்டை உருவாக்கும்.

பிரதமர் நியூட்ரினோ திட்ட அனுமதி அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.