சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று ஏற்கனவே அறிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணபலம் உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள் என்று கூறினார்.

ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு  காரணமாக சரியாக பேச முடியாமல் உள்ள விஜயகாந்த், ஏற்கனவே சிகிச்சை  பெற்று வந்த சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சை பெற இன்று பயணமானார். அவருடன் அவரது மனைவி உடன் சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த்,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது என்றும், எங்கள் கட்சி யாருக்கும் ஆதரவு கொடுக்காது என்றும் கூறினார்.

இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த்,  ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றார்.

மேலும் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் பற்றிய கேள்விக்கு,   முறைகேட்டை தடுக்கவே மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்,  ஆர்.கே.நகரில் விதிக்கப்பட்ட பிரசார கட்டுப்பாடுகளைப் பணப்பட்டுவாடா செய்பவர்களே விமர்சிப்பார்கள் என்றும் கூறினார்.

தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறதே என்ற கேள்விக்கு, மாணவ- மாணவர்களின் தற்கொலை அதிகரித்திருப்பது ஆட்சியின் அவலநிலையைக் காட்டுகிறது.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.