சென்னை

ஆர் கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்தெந்த வகையில் பணம் கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது/

கடந்த முறை ஆர் கே நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா புகாரை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டது.  தற்போது வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இம்முறையும் பணப்பட்டுவாடா நிகழும் என ஆணையம் அஞ்சுவதால் பல முறைகளில் கண்காணிப்பு நிகழ்த்தி வருகிறது.

மொபைல் ரிசார்ஜ் மூலம் பணம் அளிக்கப்படலாம் என்னும் சந்தேகத்தால் மொபைல் நம்பர்களுக்கு ரீசார்ஜ் செய்யும் ஏஜண்டுகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதே போல தொகுதியில் உள்ள அனைத்து மொபைல்கள் ரீசார்ஜையும் கண்காணிக்கவும் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப் படலாம் என ஒரு சந்தேகம் உள்ளது.  அதனால் ஒரே நபர் பல வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் அதை வங்கி அதிகாரிகள் உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.  இந்த உத்தரவு ராயபுரம், பெரம்பூர் மற்றும் உள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வங்கிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.

பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு தேர்தல் ஆணைய அதிகாரி மேற்கூறிய தகவலைக் கூறி இருக்கிறார்.  மேலே குறிப்பிட்டவை வெறும் எடுத்துக்காட்டுக்காக கூறப்பட்டது என்றும் இன்னும் பல முறைகளில் கண்காணிப்பு நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.