மதுரை:
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ‘சீமேன் கார்டு ஓகியோ’ என்ற அமெரிக்க கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கினர்.
இது குறித்து கப்பலின் கேப்டன் டூட்னிக் வாலன்டீன் உள்ளிட்ட 35 பேர் மீதும் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாலுமிகள் 35 பேரும் கைது செய்யப்பட்டனர்.
2014ம் ஆண்டு அமெரிக்க மாலுமிகள் மீதான வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்ததுடன், மாலுமிகளுக்கு ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து க்யூ பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், கீழமை நீதிமன்றமே 6 மாதங்களுக்குள் விசாரிக்கவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதலாவது நடுவர்மன்றம், 2015ம் ஆண்டில் மாலுமிகள் 35 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, தூத்துக்குடி நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்து மாலுமிகள் 31 பேரையும் விடுதலை செய்தது. 4 பேருக்கு தண்டனையை குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.