கொச்சி:
கேரளாவில் பெண் சப் கலெக்டரை சிபிஐ (எம்) எம்.எல்.ஏ. தாறுமாறாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 24ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மறயமுட்டம் கல்குவாரியில் பாறை விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமரசம் பேச சப் கலெக்டர் விஜயா அங்கு வந்துள்ளார்.
அப்போது அங்குவந்த சிபிஐ (எம்) எம்.எல்.ஏ. ஹரீந்தரன் சப் கலெக்டர் விஜயாவை மக்கள் முன்னிலையில் கடுமையாக திட்டினார். ‘‘உனக்கெல்லாம் யார் இது போன்ற முக்கிய பொறுப்பை கொடுத்தது’’ என்று பேசியுள்ளார். எம்.எல்.ஏ., உடன் வந்த மற்றொரு கட்சி பிரமுகரும் சப் கலெக்டரை திட்டி உள்ளார். போலீசார், மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ. -சப் கலெக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. கூறுகையில், ‘‘விபத்து தொடர்பாக நடந்த கலெக்டர் ஆலோசனை கூட்டத்தில், முதல்கட்டமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் மருத்துவ செலவுக்கும் அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் சப் கலெக்டர் அதனை மக்களிடம் தெரிவிக்காமல், தேவையற்ற கலவர சூழல் உருவாக காரணமாக இருந்தார்.
தாமதமாக அறிவித்ததால் அங்கிருந்த மக்கள் சப் கலெக்டரை தாக்க வந்தனர். அதனால் அவரை அங்கிருந்து செல்லும்படி கூறியும் அவர் செல்லவில்லை. அதனாலேயே அவரை கூட்டத்தினரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கடிந்து கொண்டேன்’’ என்றார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாமல் கேரள மகளிர் கமிஷன் எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனையடுத்து எம்.எல்.ஏ.வும் சப் கலெக்டரிடம் மன்னிப்பு கேட்டார்.