சென்னை
புறநகர் பகுதிகளில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் ஆதார் மையங்களில் இடைத்தரகர்கள் அதிகம் உள்ளனர்.
சென்னையை சுற்றியுள்ள அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம், தாம்பரம் போன்ற இடங்களில் 10 இடங்களில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு குழந்தைகள், ஆதார் இதுவரை எடுக்காதோர், ஆதார் கார்டில் திருத்தம் செய்வோர் என பல தரப்பட்ட மக்க்ள் வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்களில் ஒருவர், ”இந்த ஆதார் மையங்களில் இடைத்தரகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் மூலமாக வரும் மக்கள் உடனடியாக கவனிக்கப் படுகிறார்கள். நேரடியாக வருபவர்களுக்கு இணையம் மெதுவாக உள்ளது, சர்வர் வேலை செய்யவில்லை என பல காரணங்கள் கூறுகின்றனர். இந்த இடைத்தரகர்கள் உரிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு ரூ.ஆயிரமும், ஆவணங்கள் இல்லாமல் வருவோருக்கு ரூ. 2000 வாங்கிக் கொண்டு உடனடியாக பணிகளை முடித்து விடுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் இதை மறுத்துள்ளார். அவர், “ஆதார் மையங்களில் நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படுகிறது. டோக்கன்கள் கொடுக்கப்பட்டு அவைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆதார் புகைப்படம் எடுக்கப் படுகின்றன. இடைத் தரகர்கள் பற்றி ஏதும் இதுவரை புகார் இல்லை. அப்படி இருப்பின் ஆதார் மையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார்களை அளிக்கலாம்” எனக் கூறி உள்ளார்.