டில்லி

முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது.

இந்தியாவில் மிகவும் முக்கியமான புள்ளிகளுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகள் என பாதுகாப்பை இந்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.  பாதுகாப்பு அச்சுறுத்தலை அவ்வப்போது ஆராய்ந்து அதற்கேற்ற படி பாதுகாப்பு மாற்றி அமைக்கப்படுகிறது.  இசட் பாதுகாப்புப் பிரிவில் மத்திய துணை ராணுவத்தினர் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படும்.  அதே போல இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவில் தேசிய பாதுகாப்புப் படை மூலம் பாதுகாப்பு அளிக்கப்படும்.

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு இதுவரை இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது ஆய்வுக்குப் பின் அந்த பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.  இனி அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்.

பீகாரின் மற்றொரு முன்னாள் முதல்வரான ஜித்தன் ராம் மஞ்சிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப் பட்டுள்ளது.  அதன்படி இனி அவருக்கு மாநிலக் காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்படும்.