சபரிமலை,
கேரளாவில் உள்ள பந்தளம் அரண்மனை ராணி காலமானதை தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் திருவாபரண தரினம் 11 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால், அய்யப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
அய்யப்பனுக்கு சாற்றப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேவையானபோது அய்யப்பனுக்கு சாத்தப்படும்.
இந்நிலையில், பந்தளத்தில் உள்ள ச்ரம்பிக்கல் அரண்மனையில் வசித்து வந்த 94 வயதான ராணி அம்பா தம்புராட்டி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.அவரது இறுதிச் சடங்குகள் பந்தளம் அரண்மனையில் நேற்று நடைபெற்றது.
இதன் காரணமாக டிசம்பர் 6ம் தேதிவரை பக்தர்கள் திருவாபரண தரிசனம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தளத்தில் உள்ள வல்லியகோய்கல் சாஸ்தா ஆலயமும் 11 நாட்களுக்கு மூடப்படுகிறது.
இந்துமத மரபுப்படி குடும்ப உறுப்பினர்கள் காலமானால், 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவது கேரளா மக்களின் வழக்கம். அதன்படி, பந்தளம் ராணி மரணம் அடைந்ததை தொடர்ந்து, அரண்மனை ஆலயம் உள்பட, திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையும் மூடப்பட்டது.
பந்தளம் அரச குடும்பத்தால் நிர்வகிக்கப் பட்டு வத வலியகோய்கல் சாஸ்தா ஆலயம், பின்னாளில் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டால் நிர்வகிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை மண்டல, மகரவிளக்கு காலத்தில் இந்த திருவாபரணங்களை பக்தர்கள் தரிசனத்திற்காக வைப்பார்கள். தினமும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து ஐயப்பனின் திருவாபரணத்தை தரிசித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், ராணியின் மரணத்தை அடுத்து, ஞாயிறு நேற்று முதல் டிசம்பர் 6ம் தேதிவரை 11 நாட்கள் திருவாபரணங்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.