சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு,  பணப்பட்டுவாடா காரணமாக  கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, தற்போது தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி,   வருகிற டிசம்பர் 21-ந் தேதி (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அன்றுமுதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். உதவி தேர்தல் அதிகாரிகளாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் எஸ்.முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதைத்தொடர்ந்து  தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இவர்களுக்கான அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய 5 பேர் மட்டுமே வரவேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல், தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந் தேதி கடைசி நாள்.

டிசம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை), 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.

5-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 7-ந் தேதி ஆகும்.

அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.