மும்பை:
பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது மகன் மத குருவாக மாறிவிட்டதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
ஆள் கடத்தல், மிரட்டல் காரணமாக மும்பையில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் இப்ராஹிம் கஸ்கரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் பிரதீப் சர்மா விசாரணை மேற்கொண்டார். விசாரணையில்,‘‘ தாவூத் இப்ராஹிமிற்கு 3 குழந்தைகள். ஒரே மகன் மொயின் நவாஸ் டி.கஸ்கர் (வயது 31). அவர் தந்தையின் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக குடும்பத்தின் பெயர் கெட்டுவிட்டதாக கருதி, மனைவி, குழந்தைகளுடன் தனியாக சென்று விட்டார்.
தனக்கு பிறகு தொழிலை யார் செய்வார்கள்? என்ற மிகப்பெரிய கவலையும் தாவூத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சகோதரர் அனீஸ் இப்ராஹிம் கஸ்கருக்கு வயதாகிவிட்டது. மற்ற சகோதரர்களும் இறந்துவிட்டனர். தன்னுடன் இருக்கும் சில உறவினர்களையும் நம்ப அவர் தயாராக இல்லை’’ என்று பிரதீப் சர்மா தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘ சில வருடங்களுக்கு முன் தொழிலிலுக்கு உதவியாக இருந்த மகன் மொயினும் குரானை முழுமையாக பயின்று மத குருவாக மாறிவிட்டார். மசூதி நிர்வாகம் வழங்கிய சிறிய வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் மொயின், குழந்தைகளுக்கு குரான் கற்று தருவதுடன், முஸ்லிம் மத சடங்குகளையும் செய்து வருகிறார். இதனால் தாவூத் இப்ராஹிம் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்’’ என்றார்.