டில்லி:

ஆண்டுதோறும் நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு தினமாக (சாம்விதான் திவாஸ்) கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் முதலாவது அரசியலமைப்பு தினம் 2015ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்ததினத்தை முன்னிட்டு 2015ம் ஆண்டு இதற்கு தேர்வு செய்யப்பட்டது. 1950ம் ஆண்டு குடியரசு தினத்துக்கு இரண்டு நாள் முன்னதாக இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது.

இந்த விழாவை 2015ம் ஆண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு பல்கலைக்கழக மானிய குழுவான யூஜிசி இந்திய பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றக்கை அனுப்பியுள்ளது. அதில் கீழ்காணும் வழிகாட்டுதலின் படி நவம்பர் 26ம் தேதியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1. அரசியலமைப்பின் முன்னுரையை தினமும் காலை இறை வணக்கத்தின் போது வாசிக்க வேண் டும்.

2. காலை இறை வணக்கத்தில் அரசியலமைப்பின் அடிப்படை கடமைகளை வாசிக்க வேண்டும்.

3. ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் அடிப்படை கடமைகள் குறித்து ஒரு சொற்பொழிவு நடத்த வேண்டும்.

4. கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் அடிப்படை கடமைகளை ஒட்ட வேண்டும்.

மேலும், அரசியலமைப்பு குறித்த உறுதிமொழி பிரச்சாரம் டிஜிட்டல் கையெழுத்து மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.