வாத்நகர்:
2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவி ஏற்றவுடன் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். இதற்காக தீவிர பிரச்சாரத்தையும் மத்திய அரசு மேற்கொண்டது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள குஜராத் மாநிலத்தில் பிபிசி (இந்தி) பத்திரிக்கையாளர் பிரியங்கா துபே பயணம் மேற்கொண்டார்.
அப்போது தூய்மை இந்தியா திட்டம் அங்கு சரிவர செயல்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரே ஒரு வளர்ச்சியாக அங்கு பெண்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த தொடங்கியிருப்பது மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், ‘‘குஜராத் மேசனா மாவட்டம் வாத்நகர் நகராட்சி பகுதியில் தான் மோடி பிறந்தார். அங்கு தான் அவர் தனது குழந்தை பருவத்தை கழித்துள்ளார். தற்போது அந்த பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா பகுதியாக மாறியுள்ளது. தலித் மக்கள் அதிகம் வசிக்கும் ரோகித் வாஸ் பகுதியில் அரசின் வைபை திட்டம் நன்றாக வேலை செய்கிறது.
ஆனால், கழிப்பிடம் குறித்து கேட்டால் கைகளை விரித்துவிட்டு செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள மைதானத்தை தான் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாக சில மாணவிகள் அழைத்துச் சென்று காண்பித்தனர். கிராமப் புறங்களில் கழிப்பிடம் கட்டுவதற்காக 11 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் தாக்கம் மோடியின் சொந்த கிராமத்தில் தெரியவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கட்டுரையில், ‘‘சிறுவர், சிறுமியர், இளம்பெண்களும் திறந்தவெளி கழிப்பிடத்தை தான் பயன்படுத்துகின்றனர். அதோடு அவர்கள் வாழ்வதற்கும் வீடு இல்லை. அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை. கழிப்பிட வசதி குறித்து பேசவும் யாரும் வரவில்லை என்று தெரிவித்தனர். அந்த பகுதி மக்களுக்கு மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை இது வரை நிறைவேற்றவில்லை. கான்கிரீட் வீடும், கழிப்பிடமும் கட்டி கொடுப்போம் என்றனர். ஆனால் இது வரை செய்யவில்லையாம்.
2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக கடந்த அக்டோபர் 8ம் தேதி மோடி தனது சொந்த ஊருக்கு விஜயம் செய்துள்ளார். தற்போது தேர்தல் நடப்பதால் அவருக்கு சொந்த ஊர் குறித்து நினைவுக்கு வந்துள்ளது. இல்லை என்றால் இங்கு யாருமே வருவது கிடையாது. அவர்களது குறைகளை காது கொடுத்து யாரும் கேட்டது கிடையாது என்று புலம்புகின்றனர்.
30 ஆயிரம வீடுகள் கொண்ட அந்த நகராட்சியில் சுமார் 500 வீடுகளில் கழிப்பிடம் இல்லை. இதில் பெரும்பாலான வீடுகள் தலித் மற்றும் அடித்தட்டு பிரிவு மக்களுக்கு சொந்தமானதாகும். சேதமடைந்த சாலைகள், திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்கள், வீடுகளுக்கு முன்பு சாலையில் பெண்கள் துணி துவைத்தல் போன்ற காட்சிகளை காண முடிந்தது. வாத்நகர் மேம்பாட்டிற்கு 5.5 பில்லியன் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘‘வரலாற்று சுற்றுலா தளம் என்பதால் அங்கு நவீன மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்களுக்கு அரசின் திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை. வீடுகளில் கான்கிரீட் கழிப்பிடங்கள் கட்டி பயன்படுத்த அவர்கள் காத்திருக்கின்றனர்.
கழிப்பிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மோடியிடம் தெரிவிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இது தான் தேர்தலில் பெரிய பிரச்னையாக உள்ளது. திறந்த வெளி கழிப்பிடத்தை பெண்களும், சிறுவர் சிறுமியரும் பயன்படுத்துவது பெரும் அவமானமாக உள்ளது’’ என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது