டில்லி

த்திய அமைச்சர் நிதின் கட்காரியின் உதவியாளர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு அரசு நிதி உதவி அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு,  வைபவ் டாங்கே என்பவர் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2014 ஆம் வருடம் ஆகஸ்ட் 8 ஆம் தேதிமுதல் இவர் மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுடன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

கட்காரியின் ஆதரவாளரான இவர் இந்தியன் ஃபெடரேஷன் ஆஃப் கிரீன் எனர்ஜி என்னும் மின் உற்பத்தி நிறுவனத்தை கடந்த 2014ஆம் வருடம் அக்டோபர் 9 தேதி அன்று ஆரம்பித்துள்ளார்.  இந்த நிறுவனம் லாபம் இல்லாத ஒரு தொண்டு நிறுவனமாக பதியப் பட்டுள்ளது. இவருடன் 50% கூட்டாளியாக இந்த நிறுவனத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் சாலிஸ்காவ்ன் என்னும் ஊரிலுள்ள கிஸ்னராவ் பாடில் என்பவர் சேர்ந்துள்ளார்.  இந்த நிறுவனத்துக்கு அரசின் நிதி உதவியும், அரசு சார்ந்த துறைகளில் இருந்து நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளன.  அது தவிர பல்வேறு தனியாரிடம் இருந்தும் நிதி உதவிகள் பெறப்பட்டுள்ளன.

அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் அரசிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு நிறுவனத்தின் சார்பிலும் அரசிடமோ அரசு சார்ந்த துறைகளிலோ அல்லது தனியாரிடமோ நிதி உதவிகள் பெறக் கூடாது என்பது அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகளில் ஒன்றாகும்.  அது மட்டுமின்றி நிதி உதவி கோரி விண்ணப்பிப்பதும் குற்றமாகும்.   டாங்கே இந்த விதியை மீறியதாக புகார் எழுப்பப்பட்டது.

ஆனால் டாங்கே தான் விதிமீறல் ஏதும் செய்யவில்லை எனக் கூறி உள்ளார்.  நிறுவனம் அளித்துள்ள டாக்குமெண்டுகள் மூலம் அந்த நிறுவனம் பலரிடம் நிதி உதவி கேட்டதாகவும் நிதி உதவி வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.  இதில் அரசுத் துறைகளும் அடங்கும்.

நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில் 2015 ஆம் கணக்கு ஆண்டு இறுதியில் கையிருப்பு ரொக்கமாக ரூ. 74 லட்சம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மற்றொரு தகவலில் ரூ. 73 லட்சம் நிதி உதவியாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் 2015-16 ஆண்டு அறிக்கையில் மொத்தம் ரூ. 1.33 கோடி நிதி உதவி பெறப்பட்டதாக உள்ளது. அத்துடன் அரசுத் துறைகளிடம் இருந்து விதி எண் ஏ எஸ் 12 இன் கீழ் நிதி உதவிகள் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டாங்கே கட்காரியின் அமைச்சகம் தனது நிறுவனத்துக்கு எந்த உதவியும் அளிக்கவில்லை என மறுத்துள்ளார்.  அதே நேரத்தில் மின் உற்பத்தி குறித்து இந்த நிறுவனம் பல கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் பல தலைப்புகளில் கட்காரியின் கீழுள்ள துறைகளில் நடத்தி உள்ளது.  சில கூட்டங்களில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அழைக்கப்பட்டுள்ளார்.

டாங்கே அளித்துள்ள அறிக்கையில், “நான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கும் போது அரசுப் பணியில் இல்லை.  அரசுப் பணியில் உள்ளதால் பிறகு எனது பதவியை ராஜினாமா செய்து விட்டேன்.  அது லாபம் ஈட்டாத தொண்டு நிறுவனம் என்பதால் பகுதி நேரமாக பணிகளை கவனித்தேன்.  ஆனால் அரசுப் பணி காரணமாக நான் 2017ஆம் வருடம் செப்டம்பர் 13ஆம் தேதி எனது பணியை ராஜினாமா செய்து விட்டேன்.  ஆனால் அந்த நிறுவனம் எனது ராஜினாமாவை இந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதிதான் ஏற்றுக் கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்காரியின் உதவியாளராக டாங்கே நியமிக்கப் பட்ட பின்னரே இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதும் அவர் அரசுப் பணியில் இருக்கும் போதே அரசு நிதி உதவி வரத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிறுவனத்துக்கு அமைச்சர்கள் நிதின் கட்காரி மற்றும் சுரேஷ் பிரபு ஆகியோர் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.  இது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை அமைச்சர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதுவரை பதில் வரவில்லை.