டில்லி:
நாட்டில் உள்ள லட்சகணக்கான ஏழை மக்களுக்கு இலவச மருந்து மற்றும் தடுப்பூசிகளை வழங்கும் வகையில் தேசிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் மிகப்பெரிய சுகாதார திட்டமான இந்த திட்டம் இந்தியாவில் பொது சேவையின் முதுகெலும்பாக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீத நிதி இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதை 2025ம் ஆண்டில் 2.5 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2017-20ம் ஆண்டு காலக்கட்டத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் செலவு செய்ய 25 பில்லியன் டாலர்கள் தேவை என்று மத்திய சுகாதார துறை நிதியமைச்சகத்திற்கு ஆவணங்களை பரிந்துரை செய்தது.
ஆனால், இதில் 20 பில்லியன் டாலர்களை மட்டுமே மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் 20 சதவீதம் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2025ம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற மோடி அரசின் இலக்கு கேள்வி குறியாகியுள்ளது என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த காலங்களில் இந்த திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த நிதியை சில மாநில அரசுகள் சரியாக செலவிடவில்லை என்று நிதியமைச்சகம் நிதி குறைப்புகான காரணம் என தெரிவித்துள்ளது. புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 2.4 பில்லியன் டாலரில், 1.4 பில்லியன் டாலர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ‘தி லான்சட்’ என்ற மருத்துவ இதழில், ‘‘முன்பு எப்போதும் இல்லாத வகையில் 2016ம் ஆண்டில் இந்தியாவில் 60 சதவீத உயிரிழப்புகள் புற்றுநோய், நீரிழிவு போன்ற தொடர்பு இல்லா நோய்கள் மூலம் ஏற்பட்டுள்ளது. 1990ம் ஆண்டை விட இது 38 சதவீதம் அதிகம்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சகம் நிதியை குறைத்து வருவது பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமலும், மருந்து, மாத்திரைகள் கிடை க்காமலும் அவதிப்படும் நிலை உருவாகும் என்று அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.