கோவா
உலகச் சுற்றுப்பயணம் செல்ல உள்ள ஆறு பெண்கள் அடங்கிய கடற்படை அணி பிரதமரை சந்தித்தனர்.
இந்தியக் கடற்படை வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய ஒரு கடற்படை அணி உலகைச் சுற்றி வர உள்ளது. இந்த அணி வர்திகா ஜோஷி தலைமையில் பிரதிபா ஜம்வால், சுவாதி, விஜயாதேவி ஐஸ்வர்யா மற்றும் பாயல் குப்தா தலைமையில் இன்று கோவா துறைமுகத்தில் இருந்து கிளம்புகின்றனர்.
இன்று அவர்களை வாழ்த்த வந்த நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். கோவாவில் இருந்து இன்று கிளம்பும் இந்த அணி ஐ என் எஸ் வி தாரிணி என்னும் கடற்படைக் கப்பலில் செல்ல உள்ளனர். இந்த வருட ஆரம்பத்தில் முழுதும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கடற்படைக் கப்பல் 55 அடி நீளம் கொண்டது.
இந்த அணியின் பயணத்துக்கு நவிகா சாகர் பரிக்ரமா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது ஃப்ரெமாண்டில் (ஆஸ்திரேலியா), லிட்டில்டன் (நியூஜிலாந்து), போர்ட் ஸ்டான்லி (ஃபால்க்லாந்து) மற்றும் கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா) ஆகிய துறைமுகங்களுக்கு இந்தக் கப்பல் செல்லும். வரும் 2018 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் இந்தப் பயணம் கோவா துறைமுகத்தில் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது.