சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை எழிலகக் கட்டடத்தின் கலசமஹாலில் அமைந்துள்ள விசாரணை ஆணையம் இன்று முறைப்படி தனது விசாரணையைத் தொடங்கியது.
ஏற்கனவே ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை தகுந்த ஆவணங்களுடன் அளிக்கலாம்’ என்று விசாரணை ஆணையம் 22ந்தேதி வரை காலக்கெடு அறிவித்திருந்தது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், விசாரணை ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது.
இன்றைய விசாரணைக்கு ஏற்கனவே, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் அடங்கிய மனு தர்க்கல் செய்ததை தொடர்ந்து அவரை இன்று விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சம்மம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் இன்று டாக்டர் சரவணன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
அப்போது, ஜெயலிலிதா டிசம்பர் 5ந்தேதிக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று அவரது கைரேகையை காட்டி விளக்கம் அளித்தார். உயிரோடு இருப்பவர்களுக்கு உள்ள கைரேகையில் உயிரோட்டம் இருக்கும் என்றும் ஜெயலலிதாவின் கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியதாக கூறினார்.
அதற்கு ஆதாரமாக கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த உறுதிமொழி படிவத்தில் ஜெ. கைரேகை வைத்ததை காண்பித்து விளக்கமளித்தார். அதற்கான ஆவனங்களையும் தாக்கல் செய்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து விசாரணை முடிந்து வெளியே வந்த சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஜெ. கைரேகை குறித்த சந்தேகங்களை விசாரணை ஆணையத்தில் எடுத்துரைத்தோம். மேலும், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கைக்கும், அப்போல்லோ மருத்துவமனையின் அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளோம். டிசம்பர் 5 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஜெயலலிதா இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று கூறியதாக கூறினார்.
மேலும் நாளைய விசாரணைக்கும் ஆஜராக இருப்பதாகவும் சரவணன் கூறினார்.