சென்னை,

மிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 70 புதிய மணல் குவாரிகள் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு புதியதாக 70 மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தால், விரைவில் தமிழகம் பாலைவனமாகி விடும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்காக காவிரிப் பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 70 புதிய மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழகத்தின் நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இம்முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இப்போது 19 மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றி லிருந்து தமிழக அரசே நேரடியாக மணலை எடுத்து விற்பனை செய்து வருகிறது. கட்டுமானப் பணிகள் வேகம் பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் இப்போது மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மை தான். எனினும், இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தட்டுப்பாடு தானே தவிர, இயற்கையாக ஏற்பட்டதல்ல.

இப்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை தமிழக அரசு நினைத்தால் மிக எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால், தமிழகத்தில் பிரிக்க முடியாதது மணல் கொள்ளையும், திராவிட ஆட்சியாளர்களும் தான் என்பதால் மணல் கொள்ளை மூலமான தங்களின் தனிப்பட்ட வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகத் தான் புதிய மணல் குவாரிகளை திறக்க முதலமைச்சர் துடிக்கிறார்.

மலேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 55,000 டன் மணல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  தூத்துக்குடி துறைமுகத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் தமிழக அரசு தான். தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் ஒரு கன அடி ரூ.120 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், மலேஷிய இறக்குமதி மணலை ஒரு கனஅடி ரூ.60 என்ற விலையில் வழங்க முடியும். இதனால் உள்நாட்டிலும் மணல் விலை வீழ்ச்சியடைவதுடன் கட்டுமானச் செலவும் குறையும்.

மக்கள் நலன் விரும்பும் அரசாக இருந்திருந்தால் இதைத் தான் பினாமி அரசு  செய்திருக்க வேண்டும். ஆனால், உள்ளூரில் மணல் வணிகத்தில் ஈடுபட்டுள்ள தங்களின் பினாமிகள் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் இறக்குமதி மணல் விற்பனைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுகிறது. இதிலிருந்தே ஆட்சியாளர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

மதுரையில் கடந்த மே மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் ஆற்றுப் படுகைகளில் மணலே இல்லாமல் போய்விடும். மணல் இருந்தால் தான் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். எனவே அடுத்த மூன்றாண்டுகளில் ஆறுகளில் மணல் எடுப்பது படிப்படியாக நிறுத்தப்படும்.

இதற்கு மாற்றாக செயற்கை மணலை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்’’ என்று கூறியிருந்தார். ஆனால், அதன்பின் 200 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் மணல் பயன்பாட்டைக் குறைக்கவும், செயற்கை மணல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கவும் தமிழக ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் மணல் வணிகம் என்பது கடந்த 15 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட கொள்ளையாக மாறி விட்டது. ஆட்சியாளர்களும், மணல் கொள்ளையர்களும் இணைந்து ஆண்டுக்கு ரூ.35,000 கோடி கொள்ளையடிக்கின்றனர். மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம்        ரூ.86 கோடி மட்டும் தான். மக்களின் வாக்குகளையும், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கத் தேவையான பணத்தைத் கொட்டும் காமதேனுவாகவும், கற்பகத் தருவாகவும் திகழும் மணல் கொள்ளை வருவாயை ஆட்சியாளர் இழக்கத் தயாராக இல்லை என்பதையே தமிழக அரசின் இம்முடிவு காட்டுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் நான் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக 3 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளனர். அவ்வழக்கின் தீர்ப்புக்காகக் கூட காத்திருக்காமல் அவசர, அவசரமாக ஆற்று மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு துடிப்பதன் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

மணல் கொள்ளையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி, கரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளை மூட ஆணையிட்டது. அவ்வாறு இருக்கும் போது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகளை அமைப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக மட்டுமின்றி, காவிரிப் பாசன மாவட்ட மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும் அமையும்.

ஆற்று மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடி, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாவதை தடுக்க முடியாது. எனவே, புதிய குவாரிகளை  திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, செயற்கை மணல் ஆலைகளை அதிக அளவில் திறப்பது, அதன் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது ஆகியவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.