டில்லி,

நீதிமன்ற நடவடிக்கைகளை சிசிடிடிவ காமிரா மூலம் வீடியோவாக  பதிவு செய்வதில், நீதி மன்றத்துக்கு ஆட்சேபம் இல்லை என  உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்.  நீதிமன்ற நடவடிக்கைகளை விடியோ பதிவு செய்வதில் ஆட்சேபமோ, தயக்கமோ இல்லை என்று கூறியது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் கூறும்போது,   நீதிமன்றத்துக்கு என்று எந்த ஒரு ரகசியமும் இல்லை. நாங்களும் உங்களை போன்ற சாதாரணமானவர்கள் தான். எனவே அனைத்து நடவடிக்கைகளையும் விடியோ பதிவு செய்ய நீதிமன்றத்துக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறினார்.

மேலும் நீதிமன்றங்களில் சிசிடிவி காமிரா பொருத்த கடந்த மார்ச் மாதமே உத்தரவிட்டிருந்தோம், அது நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல், அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டோம், அதுதொடர்பான விவரங்களை விரைவில் தாக்கல் செய்கின்றோம் என்று  தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.