டில்லி
முத்தலாக்கை தடுக்க விரைவில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இஸ்லாமிய மக்களிடையே விவாகரத்து செய்துக் கொள்ள வேண்டும் எனில் ஒரு ஆண் மூன்று முறை தலாக் என சொல்ல வேண்டும் என்பது முறை. ஆனால் தலாக் என்னும் வார்த்தையை ஒரே நேரத்தில் மூன்று முறை கூறக் கூடாது என்னும் இஸ்லாமிய மதக் கோட்பாட்டையும் மீறி பல இடங்களில் ஆண்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்து விடுகின்றனர்.
உச்ச நீதிமன்றம் இதைத் தடுக்க ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டது. அதன்படி நடைபெற உள்ள பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் அளிக்கப்படும் என தெரிய வருகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி இந்த சட்ட மசோதா அமைக்கப்படும் என கூறப்படுகிறது.
குளிர்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து டிசம்பர் இறுதி வரை நடக்கும். ஆனால் இம்முறை 10 நாட்கள் மட்டுமே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.