திருவனந்தபுரம்.
இந்தியாவிலேயே முதன்முறையாக முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்து உள்ளார்.
கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மூத்த கம்யூனிஸ்டு தலைவர் பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு தேவையான பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர், தற்போது முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளார்.
முதல் கட்டமாக, பொருளாதார ரீதியில் பின் தங்கி உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு, கேரள தேவசம் போர்டு பணியிடங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
நேற்று கேரள அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன்,
கேரளாவில் உள்ள கோவில்களை நிர்வகித்து வரும் தேவசம் போர்டுகளில் முதல் கட்டமாக முற்பட்ட வகுப்பின ருக்கும் இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘மேலும், எஸ்.சி., – எஸ்.டி., வகுப்பினரின் இடஒதுக்கீடு வரம்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் கதாரணமாக தற்போது கேரளாவில் , ஈழவா சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டு வரும் 14 சதவிகித இட ஒதுக்கீடு 17சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அதுபோல, எஸ்.சி., – எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு, 10 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகவும், மற்ற சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும் உயர்த்தப்படும் என்றும், அதற்காக விதிகளில் மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் கோவில்களை பராமரிக்க திருவிதாங்கூர், மலபார், குருவாயூர், கொச்சி மற்றும் கூடல்மாணிக்கம் ஆகிய ஐந்து தேவசம் போர்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.