சென்னை:
பாஜ.வை சேர்ந்த 3 பேரை, கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று 3 நியமன எம்எல்ஏக்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அவர்களது கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதன் உச்சக்கட்டமாக கவர்னர் கிரண்பேடி, புதுவை மாநில பா.ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் 3 பேருக்கு, நியமன எம்எல்ஏக்கள் பதவி வழங்கி, அவர்களுக்கு இரவோடு இரவாக பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.கடந்த ஜூலை 4-ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.
ஆனால், அவர்கள் பதவி ஏற்றது செல்லாது என சட்டமன்ற சபாநாயகர், அவர்களை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்க மறுத்தும், அவர்கள் சட்டசபைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறிவிட்டார்,
இந்நிலையில், வரும் 23ந்தேதி புதுச்சேரி சட்டசபை கூட்டம் நடைபெற உளளது. இதன் காரணமாக, தங்களை சட்டசபைக்குள் அனுமதிக்க முடியாது என்ற சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் முறையிட்டனர். மேலும் இதுகுறித்து அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தினர்.
ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு, இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் நவ.17ந்தேதி அன்று விசாரணை நடத்தப்படும் எனக்கூறியுள்ளது.