சென்னை,
கோவையில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு அதிமுக அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அதே கட்சியை சேர்ந்த எம்.பி.யான அன்வர்ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ஜெயலலிதா இருந்திருந்தால், கவர்னர் இதுபோல் ஆய்வு மேற்கொண்டிருக்க முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார். இது அதிமுகவின் உள்கட்சி பூசை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு நேற்று கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால், அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகளை அழைத்து பேசினார். அதிகாரிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கு அதிமுக எம்.பி.யான அன்வர் ராஜா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நேற்று கோவை வந்த கவர்னர் பன்வாரிலால், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை அழைத்து சுமார் 3 மணி நேரம் ஆலோசன நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.
இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள, பாரதியஜனதா தவிர அனைத்து அரசியல் கட்சியினரும் ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி போல தமிழக ஆளுநர் பன்வாரிலாலும் செயல்படுகிறார் என விமர்சனம் செய்யப்பட்டது.
ஆனால், ஆளுநரின் ஆய்வை தமிழக அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி போன்றோர் வரவேற்றுள்ளனர்.
ஆனால், அதே கட்சியை சேர்ந்த அதிமுக எம்.பி.யான அன்வர் ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கவர்னரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளதாக கூறிய அவர், ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கவர்னர்களை வைத்து ஆட்சி செய்ய மத்திய அரசு முயன்று வருவதாக அன்வர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இது அதிமுகவினரிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக விலும் பூசல் நிலவி வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
எடப்பாடி அரசின் செயலற்ற தன்மை காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் தடைபட்டு உள்ளதாகவும், அதன் காரணமாகவே பாஜக ஆளுநரை களத்தில் இறங்கி உள்ளதாகவும், அதன் தொடக்கமாகவே கோவையில், அரசின் அதிகாரத்தை கையிலெடுத்து ஆய்வு செய்து வருவதாகவும் கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படு கிறது.