சென்னை:

மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆளுநரின் ஆய்வு என்று மு.க.ஸ்டாலின்  குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், இது அரசின் சீரான நிர்வாகத்துக்கு துளியும் உதவாது என்றும்,. பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் ஆய்வு நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேற்று கோவை கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அரசியல் கட்சியனரை அழைத்து பேசினார். அந்த மாவட்ட அமைச்சர் அங்கு இருந்த நிலையில் அவரை அழைக்காமல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசை தவிர, அனைத்து  அரசியல் கட்சிகளும்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரிமுதல்வர் நாராயணசாமியோ,   அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது என்று அதிரடியாக கூறி உள்ளார்.

இந்நிலையில், திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

, “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றைய தினம் கோவை சர்க்யூட் ஹவுஸில் அமர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை அழைத்து ஆய்வு நடத்தியிருப்பது, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட  நடவடிக்கையாக அமைந்து, மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வேதனையளிக்கிறது. அந்த நடவடிக்கையை இன்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் தொடர்கிறார் என்பது கவலையளிக்கிறது.

அரை நூற்றாண்டுக்கு மேல் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்து வரும் தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. அரசும், ஆளுநரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநரை நியமனம் செய்வதா? தேர்வு செய்வதா? என்ற வாதம் அரசியல் நிர்ணய சபையில் விரிவாக விவாதிக்கப்பட்டு, “ஆளுநரைத் தேர்வு செய்யும் முறை என்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும்”, என்று தெரிவித்து, முன்னாள் இந்திய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அதனை ஏற்க மறுத்தார் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

“அதிபர் ஆட்சிமுறையில் ஆளுநர் சுப்ரீம். ஆனால் பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றமும், சட்ட மன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் தலைவரும்தான் சுப்ரீம்”, என்றும் தெளிவுபடக் கூறியி ருக்கிறார், அதே விவாதத்தில் பங்கேற்ற அரசியல் நிர்ணய சபை உறுப்பினரான டி.டி.கிருஷ்ணமச்சாரி.

இறுதியில் டாக்டர் அம்பேத்கர் பேசும் போது, “ஆளுநர் பதவி என்பது அரசியல் சட்டப்படி ஒரு அலங்காரப் பதவி மட்டுமே. மாநில நிர்வாகத்தில் குறுக்கிடும் அதிகாரம் அரசியல் சட்டத்தில் ஆளுநருக்கு அளிக்கப்படவில்லை”,

ஆகவே, முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏஜெண்டாக, அலங்காரப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் மாநில நிர்வாகத்தில் தலையிட்டு ஆய்வு செய்வது என்பது மத்திய – மாநில அரசுகளிடையே நிலவும் உறவுக்கும் உகந்தது அல்ல. அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநருக்கும் ஏற்ற செயல் அல்ல, என்பதை மூத்த அரசியல்வாதியான தமிழக ஆளுநர் உணர்ந்து கொள்வார் என்று கருதுகிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது அரசு நிர்வாகம் சீர்குலைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், ராஜ்பவனில் முன்பு இருந்த பொறுப்பு ஆளுநரும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசை பதவியில் நீடிக்கவிட்டு, அழகு பார்த்துக் கொண்டிருந்த பொறுப்பு ஆளுநர் தற்போது விடுவிக்கப்பட்டு, புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், அதன் பிறகாவது அரசியல் சட்டப்படி உள்ள அதிகாரத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம்.

மாநிலத்தில் பொறுப்பான ஒரு அரசு நடக்க வேண்டுமென்றால் உடனடியாக இந்த முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.

மாநில அரசு நிர்வாகத்தை முறைப்படுத்த அரசியல் சட்டபூர்வமான அரசு ஆட்சியிலிருந்தால் போதும் என்பதை ஆளுநர் உணர்ந்து, அதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிர்வாகச் சீர்குலைவு நிச்சயம் ஏற்பட்டிருக்காது.

ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் லஞ்சம் கொடுத்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, குட்கா ஊழல் விவகாரத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனு, இந்த அரசின் மீது கொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் புகார்கள், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட மனு உள்ளிட்ட ‘குதிரை பேர’ அரசின் மீதான பல புகார்கள் இன்னும் ராஜ்பவனில்தான் நிலுவையில் உள்ளன.

அரசியல் சட்டப்படி தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றின் மீது எல்லாம் ‘அறிக்கை’ கேட்டிருக்க வேண்டிய ஆளுநர் திடீரென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் போல் அதிகாரிகளை அழைத்து “ஆய்வுக் கூட்டம்” நடத்துவது வருந்தத்தக்கது.

இந்த ஆய்வுகள் மாநிலத்தில் ‘இரண்டு தலைமை’-களை உருவாக்கி, அரசு நிர்வாகத்தை அடியோடு ஸ்தம்பிக்க வைக்கும். முதலமைச்சரின் ஆய்வா? ஆளுநரின் ஆய்வா? என்ற கேள்வி அதிகாரிகள் மட்டத்தில் எழுந்து, ‘இரு தலைமைச் செயலகங்கள்’ இயங்கும் அபாயகரமான சூழ்நிலை எழுந்து, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயலிழந்து விடும்.

மாநில உரிமைகள் பறிபோவது பற்றியோ, மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது குறித்தோ எவ்வித கருத்தும் சொல்லும் முதுகெலும்பு இல்லாமல், ஊழல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது இந்த ‘குதிரை பேர’ அரசு. எப்படி தலைமைச் செயலகத்திற்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படையுடன் தலைமைச் செயலாளர் அலுவலகத்தை வருமான வரித்துறை ரெய்டு செய்ததைத் தட்டிக்கேட்கத் திராணியில்லாமல், முதலமைச்சர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் ஒட்டிக் கொண்டிருந்தாரோ, அதேபாணியில் இப்போது எடப்பாடி பழனிசாமியும், அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சருக்கு உள்ள தட்டிக்கேட்கும் தைரியம் கூட இல்லாமல், கையறுந்த நிலையில் நிற்கிறார்.

‘குதிரை பேர’ அரசு அகற்றப்படுவதற்குள் மாநிலத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்விடும் ஆபத்தான சூழலில் தமிழகம் இப்போது இருப்பது கவலையளிக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காத ஒரே காரணத்தால் ஆயுளை நீடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் முதலமைச்சருக்கு, ஆளுநர் அவர்களின் ஆய்வு குறித்து கருத்துக்கூறும் திராணி இல்லை.

ஆனால், மாநில சுயாட்சிக் கொள்கையினை நாட்டில் உள்ள மாநிலங்கள் அனைத்திற்கும் கற்றுக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற ‘ஆளுநர் ஆய்வுகளை’ உறுதியாக எதிர்க்கிறது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு என்பது புதுவை அல்ல. மாநில நிர்வாகத்தில் தலையிட புதுவை ஆளுநருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு இல்லை. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சர வையை அரசியல் சட்டம் உருவாக்கியுள்ளதே தவிர, ஒரு அரசின் அன்றாட நிர்வாகப் பணிகளில் தலையிட்டு அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க ஆளுநர் பதவி நிச்சயமாக இல்லை. ஒரு ‘பொம்மை அரசை’ இங்கே வைத்துக் கொண்டு ‘ஆளுநர்’ மூலம் மாநிலத்தை நிர்வாகம் செய்திடலாம் என்று ஒருவேளை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கருதுகிறதோ என்று எழுந்த சந்தேகம் ஆளுநர் ஆய்வு மூலம் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“ஆளுநர் பதவி, ஆட்டுக்குத் தாடி எப்படித் தேவையில்லையோ அதைப்போன்றது”, என்பது தி.மு.க.வின் நீண்டகாலக் கொள்கையாக இருந்தாலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மதிப்பும், மரியாதையும் அளிக்க வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடம். ஆகவே, தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த ஆளுநர் விரும்பினால், இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் உத்தரவிட வேண்டும். அதை விடுத்து இப்படி அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய – மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது.

ஆகவே, அரசியல் சட்டம் அளிக்காத அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் அரசு நிர்வாகத்தை மேலும் சிதைத்து, பொறுப்புள்ள அரசு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்குப் பேரிடரை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றும், இது போன்ற ஆய்வுகளை உடனடியாகக் கைவிடுமாறும் தமிழக ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு கூறி உள்ளார்.