டிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்ததற்கு  நடிகர் ஆனந்த்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பத்திரிகையாளர் மன்ற சந்திப்பு நிகழ்ச்சியில்  கடந்த 12ம் தேதி கலந்துகொண்டு பேசினார்  நடிகர் பிரகாஷ்ராஜ்.

ஆனந்தராஜ்

அப்போது அவர், “நடிகர்கள் என்பதால் கமல்ஹாசனோ ரஜினிகாந்த்தோ உபேந்திராவோ பவான் கல்யாணோ அரசியலுக்கு வருவதை நான் ஏற்கமாட்டேன்.   நான் இந்த நட்சத்திரங்களின் ரசிகன்தான். ஆனால் அவர்கள் நடிகர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன்.

ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவருடைய செயல்திட்டம் என்ன, நான் சந்திக்கிற பிரச்சனைகளை அவர் எப்படிப் புரிந்துகொள்கிறார், அவருடைய நிலைபாடுகள் எனக்கு ஏற்புடையவைதானா… என்று தெரிந்துகொள்ள விரும்புவேன். எனக்கு ஏற்புடையதாக இருந்தால் வாக்களிப்பேன். மற்ற
அரசியல் தலைவர்களிடமும அரசியல் கட்சிகளிடமும் எனக்கு ஏமாற்றம் இருக்கிறது என்பதற்காக இவர்களை நான் அரசியல் தலைவர்களாக ஏற்க மாட்டேன்” என்று பேசினார்.

இவரது பேச்சுக்கு திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்த நிலையில் இது குறித்து நடிகர் ஆனந்தராஜை தொடர்புகொண்டு பத்திரிகை டாட் காம் இதழுக்காக பேசினோம்.

“பிரகாஷ்ராஜ் கன்னட நடிகர்களைப் பற்றி சொல்கிறாரா அல்லது தமிழ்நாட்டு நடிகர்கள் பற்றி பேசுகிறாரா என்று தெரியவில்லை. கர்நாடகத்திலேயே நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதை முடித்துவிட்டு தமிழக விவகாரங்கள் பற்றி பிரகாஷ்ராஜ் பேசட்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அண்ணா முதல் ஜெயலலிதா வரை எல்லோரும் கலைத்துறையை சேர்ந்தவர்கள்தான். மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறவர்கள் யார்  வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஒருவரிடம் பணம் இருந்தால் மின்சார விளக்கு வாங்கலாம்.. அதை ஒளிரவிட கம்பம் வாங்கலாம்.. ஆனால் மின்சாரம் கொடுப்பதற்கு அதிகாரம் வேண்டும்.

ஆகவே அந்த அதிகாரத்தைப் பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அது நடிகராகவும் இருக்கலாம்.

சில நடிகர்கள் நீண்டகாலமாகவே அரசியல், சினிமா என இரண்டிற்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறார்கள்.. என்னைப்போல!  அதற்காக எல்லோருமே அப்படி இருக்க வேண்டும் என்பது இல்லை.

மற்ற பல பணிகளைப்போல, நடிகர்களுக்கு நடிப்புதான் பணி. ஒரு கட்டத்தில் நடிப்பையும் கடந்து பொது வாழ்க்கைக்கு வர விரும்புகிறார்கள். அதில் தவறு என்ன இருக்கிறது?

பிறந்ததில் இருந்தே ஒருவர் அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்பது போல பேசுவது சரியல்ல.

தவிர தங்கள் பிரச்சினையை திரைப்படத்தில் நடிகர்கள் பேசும்போது மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்கிறார்களே..

கமல், ரஜினி போன்றவர்கள் நேரடியாக அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். ஆனால் பிரகாஷ்ராஜ் இப்படி எல்லாம் விமர்சித்து மறைமுகமாக அரசியலுக்கு வர நினைக்கிறாரோ என்னவோ.

தமிழகத்தைப் பொறுத்தவரை திரைத்துறை என்பது அரசியல் பிரச்சாரத்துக்கான கருவியாகவே பார்க்கப்படுகிறது.  கலைஞர் கதை வசனம் எழுதும் படங்களில் சில நிமிடங்கள் பேசுவார். அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே படங்களை பலமுறை பார்த்திருக்கிறோம்.

பிரகாஷ்ராஜ்

ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது ஏற்கத்தக்க கருத்து அல்ல. உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்.. அரசியல் ஈடுபாடு காரணமாக எவ்வளவோ இழந்திருக்கிறேன். சிநேகா நடித்த ஒரு படத்தில் வில்லனாக நடிக்கவந்த வாய்ப்பை மறுத்தேன். சிநேகாவை மரியாதைக்குறைவாக பேசும்படி காட்சி அமைப்பு இருக்கும்.. இது எனது இமேஜை மட்டுமல்ல… நான் சார்ந்திருக்கும் கட்சியின் இமேஜையும் பாதிக்கும்..  ஆகவே அந்த வாய்ப்பை மறுத்தேன். இப்படி நிறைய சொல்லலாம்.

தவிர ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழகம் முழுதும் சுற்றிவந்து பிரச்சாரம் செய்திருக்கிறேன். சாதாரண நேரத்திலும் பல பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். அந்தந்த பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து எனக்குத் தெரியும்.

ஆக நடிகன் என்பதற்காக எதுவும் தெரியாதவர்கள் என்று நினைத்துப் பேசக்கூடாது” என்று ஆவேசமாகச் சொல்லி முடித்தார் ஆனந்த்ராஜ்.