டில்லி

வெடிகுண்டு வழக்கில் தவறாக தண்டனை பெற்ற ஒரு இளைஞர் அவுட்லுக் ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக் குற்றத்தில் தவறாக தண்டிக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டவர் முகமது அமிர் கான்.   இவர் தனது 18ஆம் வயதில் கைது செய்யப்பட்டதில் இருந்து காவல்துறையால் பல கொடுமகள் அனுபவித்து வந்துள்ளார்.   தற்போது முப்பத்தைந்து வயதாகும் இவர் அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம் இதோ:

தேசிய மனித உரிமை ஆணையம் தற்போது உங்களுக்கு அளித்த நிவாரணம் பற்றி….

அரசு பல வருடங்களுக்கு முன்பு செய்திருக்க வேண்டியதை தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் செய்துள்ளது.    ஆணையம் எனக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை அளிக்க டில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.   ஆணையத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் அதே நேரத்தில் தவறான முடிவால் நான் அடைந்த துன்பங்களுக்கு எந்த நிவாரணமும் ஈடாகாது என தெரிவித்துக்கொள்கிறேன்

சுமார் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த போது உங்களைப் போல குற்றமற்றவர்களை நீங்கள் சந்தித்தது உண்டா?

கடந்த 1998 முதல் 2004 வரை பலரை சந்தித்துள்ளேன்.   டில்லி போலீசாருக்கு அளித்துள்ள சுதந்திரத்தினால் பல குற்றமற்றவர்கள் சிறையில் அடைபட்டனர்.   அவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீரிகள் மற்றும் சீக்கியர்கள்.   அந்தந்த நேரத்து அரசியல் சூழலினால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  நான் எனது சிறுவயதில் சிறை புகுந்ததால் எனது கல்வி தடைபட்டது.   ஆனால் சிறையே ஒரு பல்கலைக்கழகமாக எனகு இருந்தது.   அங்கு சட்டம் முதல் சமுதாய நியாயம் வரை அனைத்தும் கற்றுக் கொண்டேன்.

இதுவரை நீங்கள் ஜாமீன் கோரவில்லையா?

இந்திய சட்டம் என்பது ஒரு மாபெரும் வலை.  அதில் சிறிய மீன்கள் மாட்டிக் கொள்ள, பெரிய மீன்கள் தப்பி விடுகின்றன.    ஏழைகளும் பாமரர்களும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.   எனது வழக்கறிஞர்கள் தீவிரவாதத்தில் ஜாமீன் கிடைக்காது என ஏற்கனவே கூறி விட்டனர்.   உதாரணத்துக்கு மாருதி மேலாளர் ஒருவரைக் கொன்றதாக 100 பேர் கைது செய்யப்பட்டதைச் சொல்லலாம்.   100 பேர் சேர்ந்து ஒருவரைக் கொன்றால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது.   ஆனாலும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

எனது வழக்குகளில் இருந்து என்னை விடுவிக்கப்பட்டும் எனக்கு ஜாமீன் கொடுக்கப்படவில்லை.   எனது தாயார் நோய்வாய்ப்பட்ட போதும் சரி, என் தந்தையார் நான் கைதாகி மூன்று வருடம் கழித்து இறந்தபோதும் சரி எனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.   சல்மான் கான் போன்றோருக்கு கிடைக்கும் ஜாமீன் சாமானியர்களுக்கு கிடைப்பதில்லை.

சிறையில் இருந்து வெளிவந்ததும் உங்கள் வெளியுலக அனுபவங்கள் எவ்வாறு இருந்தது?

சிறையில் இருந்து வந்ததும் எனக்கு டில்லியில் மெட்ரோ உட்பட அனைத்தும் புதிதாக இருந்தது.  இண்டர்நெட், முகநூல், ஈ மெயில் ஆகியவைகளை நான் அதற்குப் பின்பு தான் கற்றுக் கொண்டேன்.   இவைகள் இல்லை எனில் இப்போது வாழ்க்கை நடத்துவதே கடினம் என்பதை நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன்.  எனது குடும்பத்திலும் பல மாறுதல்கள்,  பல சோகநிகழ்வுகள் ஆகியவைகளை கண்டேன்.   எல்லாவற்றுக்கும் மேலாக என்னைக் காப்பாற்ற பாடுபட்டு நோய்வாய்ப்பட்ட என் தாயை சென்ற வருடம் இழந்தேன்.    எனக்கு என் உறவினர்களே அன்னியமாகி உள்ளனர்.   என் வீட்டுக்கு வரும் உறவினர்களும் உடனே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று முன்பு விசாரிக்கப்பட்டதால் அனைவரும் எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டனர்.

இன்னும் அந்தச் சமூகக் கொடுமை இருக்கிறதா?

ஆம்.   நான் 2012ஆம் வருடம் சிறையில் இருந்து வந்ததும் எனது கண்ணீர்கதையை வெளியிட்ட செய்தித்தாட்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   சில நாட்கள் வரை நான் எனது உறவினர்கள் வீட்டுக்குச் சென்று அந்த செய்தித்தாட்களை கொடுத்து என்னைப் பற்றிய உண்மையை தெரிந்துக் கொள்ளுமாறும் என்னைக் கண்டு பயப்படத் தேவை இல்லை எனவும்தெரிவித்து வந்தேன்.    என் தாயார் இறந்த பின் எனது உறவினர்களுடன் சில நாட்களாவது சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்.

என்னை கடத்திச் சென்ற பின் (அதைக் கைது என சொல்ல மாட்டேன்) நடந்தவைகள் இன்னும் நினைவிலுள்ளது.    என்னை ஒரு குற்றமற்ற இளைஞனாக அழைத்துச் சென்றனர்.  ஆனால் என்னை பல நாட்கள் பல விதங்களில் சித்திரவதைகள் செய்தனர்.   என்னை நாள் முழுவதும் உடைகள் இல்லாமலே நிறுத்தி வைத்தனர்.  நான் எனது கையால் என் அந்தரங்கத்தை மறைத்தால் வெட்கப்படாதே கையை எடு எனச் சொல்லி என் கை மேலே அடித்தார்கள்.   இவர்கள் எல்லாம் போலீசாரே அல்ல, ரவுடிகள் எனவே நான் கருதுகிறேன்.    ஒரு வாரத்துக்கு மின்சார ஷாக்,  என் மேல் ஐஸ் வாட்டர் ஊற்றுவது,  தூங்க விடாமல் தடுப்பது, உணவு தராமல் இருப்பது  போன்ற சித்திரவதைகள் தொடர்ந்தன.  இறுதியாக நான் தான் குண்டு வெடிப்பை திட்டமிட்டதாக எழுதி கையெழுத்துப் போடச் சொன்னார்கள் எனக்கு அப்போது வயது 18 தான்.   நான் அதற்கு மறுக்கவே எனது ஆட்காட்டி விரலில் இருந்து நகத்தை பிய்த்து எடுக்க தொடங்கினர்.   வலி தாங்காமல் நான் கையெழுத்திட்டேன்    இனி என்னை அடிக்க மாட்டோம் என சொன்னதால் நான் நீதிமன்றத்தில் அவர்கள் சொன்ன குற்றம் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டேன்.    இன்னும் அந்த நிகழ்வுகள் என் மூளையில் ஓடிக் கொண்டுள்ளன.  நான் அதற்காக மனோதத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்.

இன்று திருமணமாகி ஒரு மகளுக்கு தகப்பனாக உள்ள தருணத்தில் நீங்கள் எவ்வாறு உங்கள் வாழ்க்கையை நடத்துகிறீர்கள்?

நான் எனது விடுதலைக்குப் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கீழ் உள்ள ஒரு சமூக நல நிறுவனத்தில் பணி புரிந்தேன்.   கடந்த வருடத்தில் இருந்து பல தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வருவது குறைந்துள்ளது.   அதனால் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பலருக்கு ஊதியம் தரவும் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.  அதனால் நான் நான்கு மாதம் முன்பு அந்தப் பணியில் இருந்து விலகி விட்டேன்.  தற்போது சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தரின் நிறுவனத்தில் சிறை சீர்திருத்தம் பற்றிய பணியை செய்து வருகிறேன்.

தற்போதைய நிலையில் உங்கள் எதிர்கால திட்டம் என்ன? அரசிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் நிவாரணம் என்ன?

தேசிய மனித உரிமை ஆணையம் எனக்கு எதிர்காலத்தைப் பற்றி ஒரு நம்பிக்கையை அளித்துள்ள்து.  அது எனக்குக் கிடைத்த பணம் மட்டுமின்றி ஒரு நல்ல வேலை வாய்ப்பும் ஆகும்.    எனது சிறை வாழ்க்கையால் பட்டப்படிப்பு படிக்க முடியவிலை..  ஆனால் நான் பல புத்தகங்கள் படித்துள்ளேன் அது எனக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பை  பெற்றுத் தரும் என நம்புகிறேன்.  நான் ஒரு நூலகராக விரும்புகிறேன்.   நான் எனது சிறை வாழ்க்கையில் அத்தகைய பணியை செய்துள்ளேன்.   அது போல ஒரு பணி கிடைத்தால் நன்றாக இருக்கும்.   எனது மகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதே என் எதிர்காலத்தின் முக்கிய திட்டம்.