ஐதராபாத்:
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் ரெட்டி. பாஜக தலைவர். இவர் அப்ப குதியை சேர்ந்த இரு தலித் இளைஞர்களை தண்டித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பாரத் ரெட்டி கையில் குச்சி வைத்துள்ளார். ஒரு தலித் ரெட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். மற்றொருவர் நடந்த சம்பவம் குறித்து விளக்குவது போல் உள்ளது. இவர்களுக்கு பின்னால் சேரும் சகதியுமான குட்டை ஒன்று தெரிகிறது. அப்போது, அந்த குட்டையில் இறங்கி இருவரையும் தலை முங்க சொல்லி ரெட்டி உத்தரவிடுகிறார். இதையடுத்து இருவரும் குட்டையில் இறங்கி மூழ்குகின்றனர். இதை ரெட்டி தனது செல்போனில் வீடியோ எடுக்கச் செய்துள்ளார்.
முன்னதாக காரில் வந்த பாரத் ரெட்டியை அந்த இருவரும் வழிமறித்து விசாரித்துள்ளனர். அப்பகுதியில் நடந்து வரும் மணல் கடத்தல் குறித்து அவர்கள் விசாரித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த இரு தலித்களும் தான் மணல் கடத்தலில் ஈடுபட்டனர். அதை பாரத் ரெட்டி கண்டித்தார் என்றும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.
இது குறித்து நாவிபேட் போலீசார் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் கடந்த மாதம் தசரா பண்டிகையின் போது நடந்தது. அப்போது எடுத்த வீடியோ காட்சி தான் தற்போது பரவி வருகிறது. அங்கு என்ன நடந்தது என்பதை இன்னும் சரியாக அறியமுடியவில்லை. எனினும் சம்பவத்துக்கு முன்பு வீடியோ காட்சியை பதிவு செய்தவர்கள் வந்த வாகனத்தை இரு தலித்களும் நிறுத்தி விசாரித்துள்ளனர்’’ என்றார்.
இது குறித்து சில அமைப்புகள் புகார் அளித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. அவ்வாறு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். நிசாமாபாத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் இச்சம்பவத்தை கண்டித்துள்ளனர். சம்மந்தப்பட்ட பாஜக தலைவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.