எச்.பீர்முஹம்மது

சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் வீடுகள் என சுமார் 190 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது

இந்திய வரலாற்றில் இது தான் முதல் முறை. இப்படியான மிக பரந்து விரிந்த கட்டமைப்புடன் இந்த குடும்பம் இன்று தமிழ்நாட்டில் பல கிளைகளை பரப்பி விரிந்திருக்கிறது. உண்மையில் இதற்கான தொடக்கத்தை எம்.ஜி.ஆர் தான் ஏற்படுத்தினார் என்பது தற்போது பலருக்கும் தெரியாத விஷயம்.

1982 ம் வருடம் செப்டம்பர் மாதம்.அப்போது கடலூரில் சத்துணவு திட்ட மாநாடு.ஏற்கனவே குமுதத்தில் ஜெயலலிதா தொடர் எழுதிய விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருந்தது.அந்நிலையில் கடலூர் மாநாட்டில் தான் முதன் முதலாக எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.அந்த மாநாட்டில் வீடியோ எடுக்கும் உரிமை நடராஜனுக்கு கிடைத்தது.வீடியோ தமிழ்நாட்டில் அறிமுகமான தருணம் அது.

நடராஜன் தன் மனைவி சசிகலா பெயரில் சென்னையில் வீடியோ கடை வைத்திருந்தார். தங்களின் மலேசிய தொடர்புகள் மூலம் வீடியோ ரெக்கார்டர், வீடியோ கேசட்டுகள் போன்றவற்றை அங்கிருந்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்தும், வாடகைக்கு விட்டும் தங்கள் வணிகத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் அப்போதைய கடலூர் கலெக்டராக இருந்தவர் சந்திரலேகா (பின்னாளில் முகத்தில் ஆசிட் வீசப்பட்டவர்). இவரிடம் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கான அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டது.

அவர் அந்த நிகழ்ச்சியை வீடியோ எடுக்கும் உரிமையை நடராஜனுக்கு கொடுத்தார். நடராஜன் அப்போது கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.அந்த நிகழ்ச்சியை சசிகலா வீடியோ எடுத்தார்.அந்த கேசட்டை நேரடியாக ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க அவர் தங்கியிருந்த இடத்திற்கு சசிகலா சென்றார்.அப்போது தான் முதன் முதலாக இருவரும் சந்திக்கின்றனர்.அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை கண்காணிக்கும் பெண்ணாக சசிகலாவை நியமித்தார்.

இதில் சசிகலா நடராஜன் மூலமாக இருவருக்குமான தகவல் பாலமாக இருந்தார்.இது எம்.ஜி.ஆரின் இறுதிகாலம் வரை தொடர்ந்தது.இந்நிலையில் தான் எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்கிறது.1987 டிசம்பர் 24 ம் ந்தேதி நடுநிசியில் எம்.ஜி.ஆர் மரணிக்கிறார்.அப்போது இந்த தகவலை கேள்விப்பட்ட நடராஜன் தன் மனைவி சசிகலா மூலமாக இதனை ஜெயலலிதாவிற்கு தெரியப்படுத்துகிறார்.

உடனடியாக ராமவரம் தோட்டத்திற்கு ஜெயலலிதாவை வரவழைக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.இதனால் அவசரமாக ராமாவரம் தோட்டத்திற்கு எம்.ஜி.ஆரின் உடலை பார்ப்பதற்காக வந்தார் ஜெயலலிதா.அப்போது அந்த இடத்தில் எம்.ஜி.ஆரின் உறவினர்கள் மற்றும் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாளர்களால் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டார். பின்னர் ராஜாஜி ஹாலில் அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த போது ஜானகி குடும்பத்தினர் பலர் ஜெயலலிதாவை துன்புறுத்தினர்.

இதை கேள்விப்பட்ட தற்போதைய காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசு பெண் போலீஸை அந்த இடத்தில் நிறுத்தினார். பின்னர் அவர் எம்.ஜி.ஆரின் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் கட்சித்தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஜெயலலிதா மீதான அனுதாபத்திற்கு காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை 1988 -1989 காலகட்டம் மிக முக்கியமானது.

அப்போது தான் இலங்கையில் இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடூரங்களை நிகழ்த்தியது.மேலும் தமிழ்நாடு சட்டசபையில் வரலாறு காணாத களேபரங்கள் நிகழ்ந்து ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டது.அதன் பிறகு அடுத்த ஆண்டில் தமிழ்நாடு சட்டசபைக்கு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.அதற்கு அடுத்த சில மாதங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை இழந்து வி.பி.சிங் பிரதமராக பதவியேற்றார். தமிழ்நாட்டில் எண்பதுகளின் இறுதியில் நடைபெற்ற மேற்கண்ட நான்கு நிகழ்வுகளும் அடுத்த பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யப்போகும் ஒன்றாக மாறின.

1989 ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜானகி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதன் பின்னர் கட்சி ஒன்றாக இணைந்தது.ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் அதிமுகவில் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களால் ஜெயலலிதா அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்தார்.இந்நிலையில் நடராஜன் தான் அவரை விலக விடாமல் சில தந்திர வேலைகளில் ஈடுபட்டார்.

பின்னர் ராஜீவ் காந்தி மரணம், அதற்கு பின் தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்ட அனுதாபம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியது.அதன் பிறகு தான் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சியிலும், ஆட்சியிலும் உருவாக தொடங்கியது.முதலில் நடராஜன் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் போன்ற விஷயங்களில் தலையிட தொடங்கினார்.இது ஜெயலலிதா மற்றும் நடராஜன் இடையே மோதலை உருவாக்கியது.இதனைத்தொடர்ந்து போயஸ் கார்டனில் இருந்து நடராஜன் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டார்.

இருந்தாலும் நடராஜன் தன் மனைவி சசிகலா மூலமாக கள நிலவரங்களையும், ஜெயலலிதாவின் நாடித்துடிப்புகளையும் அறிந்து வந்தார்.இந்நிலையில் ஜெயலலிதா – சசிகலா ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டனர்.தங்களின் முறைகேடுகளுக்கு வளைந்து கொடுக்காத அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.மிரட்டப்பட்டனர்.இறுதியில் தாக்கப்பட்டனர்.

இதற்கு முதல் பலி சந்திரலேகா.கடலூர் மாநாட்டில் எம்.ஜி.ஆரால் ஜெயலலிதாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் சந்திரலேகா.இதன் பிறகான இருவரின் நட்பு சுமார் பத்தாண்டு காலம் நீடித்து வந்தது. இந்நிலையில் ஸ்பிக் நிறுவன பங்குகளை மன்னார்குடி குடும்பத்தினருக்கு தெரிந்த நபர்களுக்கு விற்கும் முடிவை ஏற்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்தார் சந்திரலேகா.முதலில் கையெழுத்திடுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

பின்னர் ஜெயலலிதாவே தொலைபேசியில் அவரை மிரட்டினார். இறுதியில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்து , விளைவாக அடியாட்கள் மூலம் அவரின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது.இது தான் அதிமுக ஆட்சியின் முதல் அதிகார துஷ்பிரயோகம்.இதன் பின்னர் தமிழ்நாடு முழுக்க பலரின் நிலங்கள் மிரட்டி வாங்கப்பட்டன அல்லது ஆக்கிரமிக்கப்பட்டன.அன்றைய காலத்தில் பத்திர பதிவு அலுவலகங்கள் கணணி மயமாக்கப்படவில்லை.

எல்லாம் கையால் எழுதப்பட்ட ஆவணங்கள் தான்.அதுவே நிலங்களை ஆக்கிரமிக்க மன்னார்குடி கும்பலுக்கு வசதியாக போனது.இதற்காகவே மன்னார்குடி குடும்ப உறவுகள் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்பட்டனர்.இதற்கான பொறுப்பை சசிகலா தம்பி திவாகரன் ஏற்றார்.மேலும் எங்கெல்லாம் பண்ணை வீடுகள், பங்களாக்கள், அடுக்குமாடி கட்டிடங்கள் தென்படுகிறதோ அதை எல்லாம் இந்த அடியாட்கள் குறிவைத்தார்கள்.முதலில் சம்பந்தப்பட இடங்களின் உரிமையாளர்களிடம் அதை விற்பதற்கு அறிவுறுத்தப்படும்.

அவர்கள் மறுத்தால் மிரட்டப்படுவார்கள்.அதிலும் பணியாவிட்டால் வலுக்கட்டாயமாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பத்திர பதிவு அலுவலர்கள் துணையுடன் பிடுங்கப்படும்.அவ்வாறு வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட பங்களாக்களில் இசையமைப்பாளர் கங்கை அமரனின் பையனூர் பங்களாவும் ஒன்று.கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் இந்த பங்களாவை சசிகலா வகையறாக்கள் எதேச்சையாக நோட்டமிட்டனர்.அந்த தகவல் சசிகலாவிற்கு பாஸ் செய்யப்பட்டது.அவர் இதை ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஒப்புதலை பெற்றார்.

இதற்காக கங்கை அமரன் முதலில் போயஸ்கார்டன் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு அன்பாக கவனிக்கப்பட்டார்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பையனூர் பங்களாவின் வனப்புகளை பற்றி கங்கை அமரனிடம் சசிகலா கூறினார்.இந்நிலையில் பல கட்ட சந்திப்புகளுக்கு பிறகு விற்பதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் அவர் கழுவுற மீனில் நழுவுற மீன் மாதிரி அதிலிருந்து தப்பிக்க முயன்ற போது விற்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரே எதிர்பார்க்காத ஒரு நாளில் பத்திரபதிவு அலுவலர்களை அவரின் வீட்டிற்கு அனுப்பி வலுக்கட்டாயமாக கையெழுத்திட செய்து குறைந்தப்பட்ச தொகையை காசோலையாக அவரிடம் திணித்து அந்த பங்களா அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டது. அவரிடம் கொடுக்கப்பட்ட காசோலை கூட பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்ததாக ஒரு தகவல் உண்டு. இதன் தொடர்ச்சியில் பலரிடம் இருந்து பல நிலங்கள், கட்டிடங்கள் மன்னார்குடி உறவுகளால் பறிக்கப்பட்டன. இதற்காக பலருக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் போலியாக இருந்தன.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை வெளியில் சொல்ல முடியாமலும், வழக்கு தொடர முடியாத கையறு நிலையிலும் பலர் இருந்தனர்.சென்னையில் இன்று மன்னார்குடி உறவுகளுக்கு சொந்தமான பல இடங்கள் கூட 1991-1996 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது தான்.மேலும் 1991-1996 ஆட்சிகாலத்தில் அத்தனை அமைச்சர்களும் மாதந்தோறும் போயஸ் கார்டனுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர்.இதனை சுடுகாட்டு ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்ட செல்வகணபதி பின்னாளில் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.

இந்த கப்பம் மூலம் குவியும் தொகையை வைத்து தான் ஜெயலலிதா ஒப்புதலுடன் சசிகலா தமிழ்நாடு முழுவதையும் வளைத்தார்.மேலும் 1994 ஜெயா டிவி ஆரம்பிக்கப்பட்டது.இது முதலில் ஜெ.ஜெ டிவி என்ற பெயரில் தன் ஒளிபரப்பை தொடங்கியது.இதற்காக வெளிநாடுகளில் இருந்து கருவிகள் முறைகேடாக வாங்கப்பட்டன.மன்னார்குடி உறவுகளின் வெளிநாடு விவகார பொறுப்பாளர் தான் தினகரன்.

இதற்காக சிறுவயதில் இருந்தே தினகரனுக்கு பயிற்சி தரப்பட்டு தயார் செய்யப்பட்டார். 1996 காலகட்ட ஆட்சியின் இறுதி கட்டத்தில் சசிகலா ஜெயலலிதாவை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர போட்ட திட்டம் தான் வளர்ப்பு மகன் . அதாவது தன் அக்கா வனிதாமணியின் இளைய மகனான சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா அறிவித்து பின்னர் அவருக்கு சிவாஜி குடும்பத்தில் பெண் பார்த்து மிக ஆடம்பராக அந்த திருமணத்தை நடத்தினார்.

அதற்கான நகைகள் அனைத்தும் பாலு ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டன.கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட நகைகளுக்கான பணம் அந்நிறுவனத்திற்கு கொடுக்கப்படவில்லை.பணம் கேட்ட அதன் உரிமையாளர் மிரட்டப்பட்டார். இந்நிலையில் இதன் காரணமாக ஏற்பட்ட கடனால் அந்நிறுவன உரிமையாளர் பாலு தற்கொலை செய்து கொண்டார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாட்டு மக்கள் மரண அடி கொடுத்தனர்.அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.

இதில் சசிகலாவும் சேர்க்கப்பட்டார்.ஆனால் எந்த கட்டத்திலும் சசிகலாவும், அவரின் உறவுகளும் அப்ரூவராக மாறவில்லை.காரணம் இதை எல்லாம் கடந்து எளிதாக வர முடியும் என்ற அபார நம்பிக்கை தான்.அந்த நம்பிக்கை இரண்டே ஆண்டுகளில் அவர்களுக்கு பலனளித்தது.1998 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பிஜேபியுடன் கூட்டணி அமைத்து பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது.

மேலும் மத்தியில் பிஜேபி ஆட்சி அமையவும் காரணமாக இருந்தது.அதை வைத்து தன் மீதான வழக்குகளில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று ஜெயலலிதா கணக்கு போட்டார்.அது நடக்காமல் போகவே பிஜேபி ஆட்சியை கலைத்தார்.இருந்தும் மத்தியில் இருந்த பிராமண லாபி ஜெயலலிதாவிற்கு நன்றாக கைக்கொடுத்தது.அதன் மூலம் டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற்றார்.

பின்னர் 2001 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.அப்போது தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது.அந்த நிலையிலும் கூட முந்தைய சூழல்களில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.வெளியே தெரியாமல், மாட்டிக்கொள்ளாமல் அறிவியல் பூர்வமாக எப்படி ஊழல் செய்வது என்பதை அப்போது கற்றுக்கொண்டார்.திட்டங்களில் கிடைத்த கமிஷன்கள் மூலமாக ஓரளவிற்கு சொத்து சேர்த்தார்.இந்நிலையில் 2011 ல் திமுக மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாக மீண்டும் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா.

இந்த காலம் தான் மன்னார்குடிக்கு பொற்காலம்.தாங்கள் அரியணை ஏறும் காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து விட்ட தருணம் அது.சொத்துக்குவிப்பு வழக்கு ஜெயலலிதா மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருந்த காலம் அது.அப்போது தான் நடராஜன் மன்னார்குடி உறவுகளை அழைத்து பெங்களூர் ஓட்டல் ஒன்றில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.இதனை உளவுத்துறை மூலம் அறிந்த ஜெயலலிதா 2011 டிசம்பரில் நடராஜன், சசிகலா உட்பட அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார்.சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றவும் செய்தார்.அதே நேரத்தில் சசிகலாவின் அண்ணி இளவரசியை வெளியேற்றவில்லை.

அவர் மூலமாக தான் சசிகலா ஜெயலலிதாவின் நகர்வுகளை அறிந்து வந்தார்.இந்நிலையில் திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஆறு மாதங்களில் மீண்டும் சசிகலா ஜெயலலிதாவுடன் இணைந்தார். இதில் இளவரசியை சசிகலாவுடன் சேர்த்து வெளியேற்றாமல் தன் கூட வைத்திருந்ததன் மூலம் ஜெயலலிதாவின் மன்னார்குடி வெளியேற்றம் என்பது சிறந்த நாடகம் என்பதாக கருத வேண்டியதிருக்கிறது.

இந்த காலத்தில் ஏகப்பட்ட பணம் புரண்டது.அரசின் கஜனாவும் ஓரளவிற்கு நிரம்பியதால் கமிஷன், கட்டிங், கலெக்‌ஷன் என்று ஏராளமான பணம் குவியத்தொடங்கியது.மேலும் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த மிடாஸ் மதுபான ஆலையின் வணிகம் மூலம் பல கோடிகள் போயஸ் கார்டனில் குவிந்தன.இந்நிலையில் 2015 அக்டோபரில் வேளச்சேரியில் பிரமாண்டமாக இருக்கும் பீனிக்ஸ் மால் அதன் உரிமையாளரிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டது.

இந்த செய்தியை வெளியிடாமல் இருக்க ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டன.ஆனாலும் தி இந்து ஆங்கில பத்திரிகை இதனை வெளியிட்டது.இதன் மூலம் உடனடியாக எழுந்த சலசலப்பை திசைதிருப்ப மக்கள் அதிகாரம் பாடகர் கோவனை கைது செய்து பிரச்சினையை திசை திருப்பினார் ஜெயலலிதா.ஊருக்கு ஊர் சாராயம் என்ற பாடலை அப்போது உளவுத்துறையே மிக வேகமாக வாட்ஸ் அப்பில் பரப்பியது.

இதன் தொடர்ச்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பல பண்ணை வீடுகளும் மிரட்டிவாங்கப்பட்டன.இவை மன்னார்குடி உறவுகள் பலரின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.இப்போது தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீடுகளும் அவ்வாறு வாங்கப்பட்டஒன்று தான்.இவ்வாறாக கடந்த 15 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்துமே ஜெயலலிதாவிற்கு தெரிந்து, அவரின் ஒப்புதலின் பெயரிலேயே நடைபெற்றன.

தனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லாத நிலையில் அவர் இவ்வளவு சொத்துக்களை சசிகலா மூலம் சேர்த்ததற்கு காரணமே அரசியல் நிலைப்பு தான்.பணமே அரசியலின் இதயமாக மாறி இருக்கும் இந்த காலத்தில் பணம் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற எண்ணத்திற்கு ஜெயலலிதா வந்தார்.ஒற்றை மனிதராக அதிமுக என்ற பெரும் கட்சியை கையில் வைத்திருந்த நிலையில் அந்த பணத்தில் ஒரு பகுதியை அதற்காக செலவிட்டார்.

தேர்தல் செலவிற்கு எல்லாம் இதிலிருந்து தான் அள்ளி வழங்கப்பட்டது.இதன் உபரி தான் தற்போது வருமான வரி சோதனைக்குள்ளாகி இருக்கும் சசிகலா சொந்தங்களின் சொத்துகள்.ஆக அதிகாரத்தை பயன்படுத்தி சசிகலா செய்த அனைத்து அழிச்சாட்டியங்களுக்கும் ஜெயலலிதா தான் மூல காரணம். இந்நிலையில் தமிழ்நாட்டு வரலாற்றை பொறுத்தவரைஜெயலலிதா அப்பாவியுமல்ல. சசிகலா அப்பாட்டக்கருமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.