மும்பை:

ஏழு நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப், அவரது மனைவி  ராணி மதில்டே தம்பதியினர் நேற்று மும்பையில் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினர். அவர்களுடன் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் பங்கு கொண்டார்.

இது அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

பெல்ஜியம் அரசர் ஃபிலிப் ஒரு வார கால சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருக்கிறார். அவர்களுடன்   6 அமைச்சர்களும், பெல்ஜியத்தைச் சேர்ந்த 86 நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய உயர்நிலை வர்த்தகக் குழுவினரும் வந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை  பிரதமர் மோடியும், பெல்ஜியம் அரசர் ஃபிலிப்பும்  சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி, தனத  டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பெல்ஜியம் அரசருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தியா, பெல்ஜியத்துடன் சிறப்பான உறவுகளைப் பேணி வருகிறது.இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்து நாங்கள் பரி சீலித்து வருகிறோம் என்று பதிவிட்டிருந்தபார்.

அதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், பெல்ஜியம் அதிக அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே, பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய வர்த்தகத் தோழமை நாடாகவும் இந்தியா திகழ்வதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று மும்பை வந்த மன்னரும், அவர் மனைவியும், மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தில் மாணவர்களுடன் ஒன்றிணைந்து கிரிக்கெட் விளையாடினர்.

இவர்களுடன் மைதானத்தில் விரேந்திர சேவாக்கும் உடனிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது.

பிலிப்  அரசராகப் பொறுப்பேற்ற பின் அவர் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.