சென்னை,
வழக்கறிஞர் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.
சென்னையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன் கிருஷ்ணன், வழக்கு ஒன்றுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்விகளை தொடுத்தார்.
அப்போது, கல்லூரிக்கே செல்லாமல் சிலர் வழக்கறிஞர் ஆவதால், கட்டப் பஞ்சாயத்து அதிகமாகி விட்டது. கட்டப்பஞ்சாயத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், வழக்கறிஞர் தொழிலை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த தொழிலை நாமே காப்பாற்ற முடியாவிட்டால் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர் சங்கம் இப்பிரச்னையையும் முன்னெடுக்க வேண்டும் என்றும், 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வழக்கறிஞர் தொழில் மீதான புனிதத்தை நாம் தான் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், கல்லூரிக்கு செல்லாமலே தொலைதூரக் கல்வி மூலம் வேறு மாநிலங்களில் சட்டம் படிப்பவர்களால் தான் இந்த வழக்கறிஞர் தொழில் மீதான புனிதம் கெடுகிறது என்ற நீதிபதி கிருபாகரன், தனியார், அரசு துறை களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர்கள், காவல் துறைக்கு எதிராக மட்டுமே போராடாதீர்கள். போலீசாருக்கு எதிராக மட்டும் போராடுவதை விட்டுவிட்டு, வழக்கறிஞர்கள் தொழிலையும் சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள் என்றார்.
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார்.
நீதிபதி கிருபாகரனின் கருத்து வழக்கறிஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.